மாமியார் கம்யூனிஸ்ட்! மருமகள் அதிமுக! ஓங்கப்போவது யார் கை? உள்ளாட்சித் தேர்தல் ருசிகரம்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மாமியாரும் மருமகளும் வெவ்வேறு கட்சிகள் சார்பில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு களமிறங்கியுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் இரண்டு கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கியிருப்பது பாபநாசம் மக்களிடையே பேசு பொருளாக உள்ளது.
இதேபோல் தமிழகத்தின் பல இடங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும் வெவ்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவது கவனிக்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மாமியாரும், மருமகளும் இரு வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கி கலக்கி வருகின்றனர்.

பாபநாசம் பேரூராட்சி
பாபநாசம் பேரூராட்சியின் 10-வது வார்டில் அதிமுக வேட்பாளராக ரேகா சதீஷ்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இவரது மாமியார் விஜயா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக 1-வது வார்டில் போட்டியிடுகிறார். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் வேளையில் அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். பாபநாசம் பேரூராட்சியை பொறுத்தவரை மொத்தம் 15 வார்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விவாதப் பொருள்
விஜயா பாபநாசம் பேரூராட்சியின் மாதர் சங்க தலைவராகவும் அவரது மருமகள் ரேகா சதீஷ்குமார் 10-வது வார்டு அதிமுக பகுதி செயலாளராகவும் இருந்து வருகிறார். தேர்தலில் ஓங்கப்போவது மாமியார் கையா அல்லது மருமகள் கையா என பாபநாசத்தில் பட்டிமன்றம் வைக்காத குறையாக விஜயா மற்றும் ரேகா குறித்து தேநீர் கடைகள் முதற்கொண்டு விவாதங்கள் நடந்து வருகின்றன.

கணவன் மனைவி
இதேபோல் பாபநாசம் பேரூராட்சியின் 14-வது மற்றும் 15-வது வார்டுகளில் கணவன் மனைவி போட்டியிடுகின்றனர். தமிழகம் தழுவிய அளவில் பல இடங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும், உறவுகளுக்குள் ஒருவரை ஒருவரை எதிர்த்தும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications