மலை மலையாக மட்டன் சோறு.. தஞ்சாவூர் அம்மன் கோயிலில் இஸ்லாமியர் வைத்த கறி விருந்து மதத்தை உடைத்த பாசம்
தஞ்சாவூர்: வாழ்வில் ஆபத்தான நேரத்தில், மத வேறுபாடு ஒரு தடையாக இல்லாமல், மக்கள் ஒன்றிணைந்து உதவி செய்யும் பல தருணங்களை பார்த்திருக்கிறோம்.. சுனாமி முதல் கொரோனா தொற்று, புயல், மழை, வெள்ளம் பாதிப்பு வரை இதுபோன்ற நெருக்கடி நேரங்களில் மக்களின் ஒன்றிணைதல் நடப்பதுண்டு.. இது தனிப்பட்ட நபர்களின் வாழ்விலும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் உள்ளது.. அப்படியொரு சம்பவம்தான் தஞ்சாவூரில் நடந்துள்ளது.. உண்மையான சமூக ஒற்றுமைக்கு உதாரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம்.
தஞ்சாவூர் நாவலர் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன்... இவருக்கு 25 வயதாகிறது.. மளிகை கடை நடத்தி வருவதால், இவரிடம் அந்த பகுதி மக்கள் எல்லாருமே பொருட்களை வாங்கி செல்வார்கள்.. ஜாகிர் உசேன் இயல்பாகவே அனைவரிடமும் நெருங்கி பழகுவார்..

ஜாகீர் உசேன் அன்பான குணம்
இஸ்லாமியராக இருந்தாலும், இந்து மக்களிடம் அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மாமன் மச்சான் என்று உறவு முறை சொல்லிதான் அழைத்து பேசுவாராம்.. அதற்கேற்றபடி இந்து மக்களும், ஜாகீர் உசேனிடம் மிகவும் பிரியத்துடன் பழகி வந்துள்ளார்கள்..
இந்நிலையில் ஜாகீர் உசேனின் மகனுக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளது.. இதனால் வேதனைக்கு ஆளான ஜாகீர் உசேன் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு மகனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.. ஆனால் சிறுநீரக பாதிப்பானது உயிருக்கு ஆபத்தான நிலைமைக்கு சென்றுள்ளது..
இவரது நிலைமையை அறிந்த நாவலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் உசேனுக்கு ஆறுதல் கூறியதோடு அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில் ஜாகிர் உசேனை பிரார்த்தனை செய்து கொள்ளவும் சொன்னார்கள்.. மிகவும் சக்தி வாய்ந்த அம்மன், நிச்சயம் வேண்டுதலை நிறைவேற்றி தரும் என்று கூறி ஜாகிர் உசேனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையும் தந்தார்கள்..
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
இதைக்கேட்டு மனம் உருகிய ஜாகிர் உசேன், தனது மகனின் குணமடைய வேண்டி வீரமாகாளியம்மன் ஆலயத்தில் சென்று மனமார்ந்த பிரார்த்தனைகள் செய்தார். வேண்டுதல் படி ஜாகிர் உசேன் மகன் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிவு செய்தார்
இறுதியில் அருள்மிகு அம்மன் ஆசீர்வாதம் கொண்டு ஜாகிர் உசேனின் மகன் பூரண சுகமடைந்தார்.. இதனால் ஜாகீர் உசேன், மகிழ்ச்சியும், பெரும் நிம்மதியும் அடைந்தார்..
மகனின் குணமடைந்ததையடுத்து, ஜாகிர் உசேன் தம்பதியினர் தனது நேர்த்தி கடனை நிறைவேற்றுவதற்காக, நேற்று வீரமாகாளியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து படையல் செய்தார்.. கிடா வெட்டி, பகுதியின் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறினார்.. தனது மகன் குணம் ஆனதற்கு இந்த பகுதி மக்கள் தான் எனக்கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர் ஜாகிர் உசேன் தம்பதியினர்.
மதத்தை தாண்டிய பாசம்
நாவலர் நகர் பகுதி மக்கள் அனைவருமே இந்த விருந்தில் பங்கேற்றனர்.. மக்கள் அனைவரும் ஜாகிர் உசேனுக்கு வாழ்த்தும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.. இதைக்கேள்விப்பட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆச்சரியத்திலும் வியப்பிலும் மூழ்கிவிட்டனர்..
இது வெறும் பக்தியின் அடிப்படையில் இல்லாமல், சிறந்த மனித நேயம் மற்றும் மத ஒற்றுமை உதாரண சம்பவமாக திகழ்ந்துள்ளது.. மத வேறுபாடுகள் முக்கியமில்லை; மனித நேயம், ஆதரவு மற்றும் நம்பிக்கை முக்கியம் என்பதையே இந்த தஞ்சை நிகழ்வு காட்டுகிறது. மதத்தைத் தாண்டிய சகோதர பாசம் இப்படி நம்மில் பல தருணங்களில் வெளிப்பட்டு கொண்டுதான் உள்ளது...!!












Click it and Unblock the Notifications