பிரதமர், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்? ஹிஜாப் போராட்டத்தில் சர்ச்சை.. தவ்ஹீத் ஹமாத் பேச்சாளர் கைது
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜே.எம் ஹாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கினர்.

ஹிஜாப் விவகாரம்
அதில், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவித்து ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். மேலும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவ்ஹீத் ஜாமாத் போராட்டம்
இந்நிலையில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தெற்கு மாவட்ட தலைவராக அதிரை ராஜிக் என்பவர் தலைமை வகித்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சர்ச்சைப் பேச்சு
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பேச்சாளரான ஜமால் முகமது உஸ்மான் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி தூக்கிலிட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. உணர்ச்சிவசப்படும் சமூகம் எனவும், நீதிபதிகளுக்கு விபத்து போன்றவை ஏதாவது ஏற்பட்டால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் காரணம் என பேசியதாகவும், அவரது பேச்சு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

அதிரடி கைது
இதற்கு பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலரான கௌரிசங்கர் அதிராம் பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற ஜமால் முகமது உஸ்மானை நேற்று இரவு வல்லம் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஜமால் முகமது உஸ்மான் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications