தஞ்சாவூர் சரண்யா.. வீட்டு வாசலிலேயே தில்லு.. கரெக்ட்டா வந்த பட்டுக்கோட்டை போலீஸ்.. விழித்த 2 களவாணி
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. என்ன காரணம்?
கடந்த சில வருடங்களாகவே, கால்நடைகளை திருடி செல்வது தமிழகத்தில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.. அதிலும் ஆடுகளை கண்டால், மர்மநபர்கள் விடுவதேயில்லை.. வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை குறி வைத்து நடக்கும் திருட்டுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.

விவசாயிகள்: வான்மழை பொய்க்காத காரணத்தினால், எத்தனையோ விவசாயிகள், இந்த கால்நடைகளைதான் பெரிதும் நம்பி, வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள்.. அப்படியிருக்கும்போது, அவர்கள் வீட்டிலிருக்கும் ஆடுகளையும் குறி வைத்து மர்மநபர்கள் திருடி சென்று விடுவதால், கண்ணீருடன் போலீசில் புகார் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் ஆடுகளை திருடுபவர்கள் பெரும்பாலும், சொகுசு கார்களில் வந்துதான் ஆடுகளை திருடி செல்கிறார்கள்.. இதற்காகவே, எந்தெந்த பகுதியில் ஆடுகள் உள்ளன? எவ்வளவு ஆடுகள் இருக்கின்றன? எங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன? என்ற விவரங்களையெல்லாம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட பகுதிகளில் மர்மநபர்கள் நோட்டமிட்டுவிடுகிறார்கள்.

சொகுசு கார்: பிறகு, சமயம் பார்த்து, நள்ளிரவில் காரை கொண்டு வந்து நிறுத்தி அதில் ஆடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு தப்பிவிடுகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இப்படி நிறைய ஆடுகள் காணாமல் போவதாக போலீசுக்கு தகவல் சென்றபடியே உள்ளது.
2 நாட்களுக்கு முன்புகூட, வேளாங்கண்ணி அருகிலுள்ள தெற்கு பொய்கைநல்லூரில், ஒரு சிசிடிவி வீடியோ சிக்கியது. அப்போது நள்ளிரவு நேரத்தில், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளை, சொகுசு காரில் 2 பேர் தூக்கி போட்டு சென்றது பதிவாகியிருந்தது.
பட்டுக்கோட்டை: இதோ இப்போது தஞ்சை மாவட்டத்திலும் இப்படி ஒரு திருட்டு நடந்துள்ளது.. பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத்தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சரண்யா.. 30 வயதாகிறது.. இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்...
இவர் தன்னுடைய வீட்டில், ஒரே ஒரு ஆட்டை கட்டி வைத்திருந்தார்.. எப்போதுமே இந்த ஒரு ஆடுதான் சரண்யா வைத்திருப்பாராம். இதையறிந்த மர்ம நபர் ஒருவர், இதை திருடியிருக்கிறார். இந்த வீடியோவும் இப்போது சிக்கியிருக்கிறது.
சரண்யா: சரண்யா வீட்டு வாசலுக்கு வந்த நபர், தெருவில் யாராவது வருகிறார்களா? என்று சுற்றிப்பார்க்கிறார். யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட மர்மநபர், சரண்யா வீட்டில் கட்டியிருந்த ஆட்டை நைசாக கையில் தூக்கிக் கொண்டு தெருவிற்கு வருகிறார். அந்த நேரம் பார்த்து, இன்னொரு நபர் ஒரு ஸ்கூட்டியில் வருகிறார்.
உடனே 2 பேரும் ஸ்கூட்டியில் தப்பி பறக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.. அத்துடன் போலீசாரின் பார்வைக்கும் சென்றது.
களவாணிகள்: இதையடுத்து, இந்த வீடியோ வெளியான ஒருசில மணி நேரங்களிலேயே 2 திருடர்களும் அகப்பட்டுக் கொண்டார்கள்.. அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சிங் (32), சுரேஷ் (25) 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆட்டையும் பறிமுதல் செய்து சரண்யாவிடம் ஒப்படைத்தனர். திருடு போன தன்னுடைய செல்ல ஆடு, உடனடியாக கிடைத்துவிட்டதால், மிகுந்த சந்தோஷம் அடைந்தார் சரண்யா.
ஆனால், ஆடு திருடிய சந்தோஷத்தை, கொஞ்ச நேரம்கூட அனுபவிக்க முடியாத நிலையில், 2 களவாணிகளும் திருதிருவென விழித்தவாறே ஜெயிலுக்கு போனார்கள்.












Click it and Unblock the Notifications