ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தல்-128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது!
தஞ்சை: ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட 128 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில், கஞ்சா கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில், ஆப்ரேசன் கஞ்சா 2.0 மூலம், கடத்தல்கார்களை உடனுக்குடன் போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை சோதனையிலும் காவல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், கஞ்சா கடத்தலும், கஞ்சா விற்பனை செய்வதும் ஆங்காங்கே இன்னும் தொடர்ந்து அரங்கேறிதான் வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று பேராவூரணி அருகே மினிலாரியில் கடத்தப்பட்ட 700 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து தஞ்சையிலும் லாரியில் கடத்தி வரப்பட்ட 128 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை ரெயில்வே குட்செட் எடை மேடை அருகே தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிறிது தூரத்தில் 2 லாரிகள் நிறுத்தப்பட்டு, ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு, 7 பேர் பொட்டலங்களை இடமாற்றம் செய்ததை போலீசார் பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

போலீசாரைக் கண்டதும் அந்த கும்பலில் இருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் இரண்டு லாரிகளையும் அதிரடி சோதனை நடத்தியதில், லாரியில் 128 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, 5 பேரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவர்கள், திருபுவனத்தைச் சேர்ந்த அசாருதீன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ஆசிப், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கா சமுத்திரத்தை சேர்ந்த சதாம் உசேன், உசிலம்பட்டி கீழபுதுரை சேர்ந்த சஞ்சய், ஈரோடு புதுகொத்தை காட்டை சேர்ந்த மாணிக்கராஜ் என்பது தெரியவந்து.
இந்த கும்பல், ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக லாரியில் 128 கிலோ கஞ்சா கடத்தி வந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விற்க முயன்றதும் அம்பலமானது. இதனையடுத்து, 2 லாரிகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications