ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 50 ரூபாய்.. தஞ்சாவூர் கும்பகோணத்தில் ஹெல்மெட்டுடன் குதித்த வாகன ஓட்டிகள்
தஞ்சாவூர்: 2 வருடங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது.. அரவக்குறிச்சி வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் என்பவர், நாகம்பள்ளி பகுதியில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் திருவள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் 10 திருக்குறள்களை ஒப்பித்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை பொங்கல் தினத்தில் நடத்தியிருந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்றது நினைவிருக்கலாம். இப்போது கும்பகோணத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்தவகையில், சென்னையில் இன்று (26.01.2026 - திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.84-க்கும், டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறையாத பெட்ரோல் விலை
இப்படி தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், எப்போது விலை குறையும்? எப்போது சலுகைகள் கிடைக்கும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்தபடியே உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், ஒருசில மாவட்டங்களில் திடீர் திடீரென ஒரு ஆஃபர் வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துவிடும்.. அப்படித்தான் 2 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது..
பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி என்ற இடத்தில் புதிதாக பெட்ரோல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டது.. இந்த திறப்பு விழாவை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சியில் புதுக்கோட்டை
அதன்படி, காலை 9 மணி முதல் 10:30 மணி வரை 2 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் கூடுதலாக 2 லிட்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 2.5 லிட்டருக்கான விலையே செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆஃபர், புதுக்கோட்டை முழுவதும் தீயாய் பரவியது.. அடுத்த சிறிது நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட புது பெட்ரோல் பங்குக்கு, பலரும் வாகனங்களுடன் குவிய துவங்கினர்.. டூவீலர்கள், கார்கள், வேன்கள் உட்பட கனரக வாகனங்கள் வரை வாகனங்களும் பெட்ரோல் பங்க் முன்பு, வரிசை கட்டி நின்றன.. ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் நின்றன..
மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது... பெட்ரோல் பங்க்கையும் தாண்டி பிரதான சாலை வரையிலும், வாகனங்கள் வரிசையாக நின்றதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன... இதனால் விரைந்துவந்த போக்குவரத்து போலீசார், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த திறப்பு விழா சிறப்பு சலுகையானது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை தந்தது.. இது போன்ற இலவசங்களை அறிவிக்கும் முன்பு, காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்துவிட்டு, அதற்கு பிறகு இலவசங்களை வழங்கவேண்டும், முன்னறிவிப்பின்றி செயல்படுவதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அவசர காரியத்துக்கு செல்ல முடியாத நிலைமையும் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது..
கும்பகோணம் பெட்ரோல் பங்க்
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆடுதுறையில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் என அறிவித்ததால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது
இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்திலும் அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்திய 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கில் இன்று ஒரு மணி நேரம் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் ஐம்பது ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தனர்
அதன்படி பெட்ரோல் வாங்க வரும் நபர்கள் தலைகவசம் அணிந்து வர வேண்டும் கூறியிருந்தால் 50 ரூபாய் பெட்ரோலை பெறுவதற்கு ஏராளமான வாடிக்கையாளர் தலைக்கவசம் அணிந்து வந்து ரூ.50 பெட்ரோலை வாங்கிச் சென்றனர்.. ஆனால் 1 மணி நேரம் என்று மட்டுமே சொன்னதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது..
மேலும் பெட்ரோல் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றும் பெட்ரோல் ஊழியர்கள் வழங்கினார்கள்.. இந்த சம்பவம் தஞ்சையின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications