ராஜ ராஜ சோழன் 1038வது ஐப்பசி சதய விழா கோலாகலம்.. மின் ஒளியில் ஜொலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவில்
தஞ்சாவூர்: பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038வது சதய விழா மங்கள இசை மற்றும் திருமுறை விண்ணப்பத்துடன் துவங்கியது. சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுக்க மின் விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது. 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டே ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜராஜ சோழன், சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் 947ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்கிறது வரலாறு. அதே சதய நட்சத்திரத்தில் 985ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் என்கிறது வரலாறு. சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவன் ராஜராஜன். தஞ்சை கோயில் வடித்தெடுக்கவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன் காசு கொடுத்தவர்களைக்கூட மறக்காமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜ ராஜ சோழன்.
பொன்னியின் செல்வன் என்பது உள்ளிட்ட 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால்தான் அவரது புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது. இவர் பதவியேற்ற 985ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே சதய விழா கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டு ராஜ ராஜ சோழனின் 1038 வது சதய விழா இன்றைய தினம் கோலாகலமாக தொடங்கியது. இன்று காலை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ.தெய்வநாயகம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் மு. ராஜேந்திரன், இந்தியத் தொல்லியல் துறை கோயில் அளவீட்டுப் பிரிவு இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் இந்திரா அரசு, சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை ந. செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்தப் பகுதியே மின் ஒளியில் பிரகாசிக்கிறது.
சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி பட்டிமன்றம், நாட்டியம் ,நாடகம் ,திருமுறை அரங்கம் ,கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அத்துடன் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறவுள்ளன.
ராஜராஜ சோழ மன்னரின் 1038வது சதய விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பெரிய கோவில் முழுவதும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.












Click it and Unblock the Notifications