தஞ்சாவூர் ஆசிரியை கொலை சம்பவம்.. ஆசிரியர்கள், மாணவர்களுக்காக.. அமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பட்டப்பகலில் அரசுப் பள்ளிக்குள் நுழைந்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, கொலை சம்பவம் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தை அடுத்த மல்லிப்பட்டினம், சின்னைமனை பகுதியை சேர்ந்த முத்து, ராணி தம்பதியின் மூத்த மகள் ரமணி (வயது 24). எம்.ஏ., பி.எட். பட்டதாரியான ராணிக்கு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி தற்காலிக தமிழ் ஆசிரியையாக வேலை கிடைத்துள்ளது.

சின்னைமனை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருடைய மகன் மதன்குமார் (30). இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பி மீன்பிடி தொழில் செய்து வந்திருக்கிறார். ரமணியும், மதனும் ஒரே ஊர் மற்றும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாம்.
ரமணியும், மதனும் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் கேட்டு ரமணி வீட்டிற்கு அவரது பெற்றோர் சென்றுள்ளார்கள். அப்போது ரமணியின் உறவினர் ஒருவர் மதன்குமாரின் பழக்க, வழக்கம் சரியில்லை என கூறியிருக்கிறார். இதனால் ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு பெண் கொடுக்க விருப்பமில்லை என்று கூறி மறுத்துவிட்டார்கள்.
இதையடுத்து, தமிழ் ஆசிரியை ரமணியை சந்திக்க அரசுப் பள்ளிக்குச் சென்ற மதன் பள்ளியின் ஓய்வறையில் இருந்த ரமணி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை ரமணியை குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் ரமணி சரிந்து விழுந்தார்.
உடனடியாக சக ஆசிரியர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவின்பேரில், அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தால் அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர் உத்தவின்பேரில் அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 522 மாணவ, மாணவிகள், 22 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
உளவியல் மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், மாவட்ட மனநல அலுவலர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications