மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா.. தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கியது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் மன்னர் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இவ்விழா இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. நாளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ராஜராஜ சோழ மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல, ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டியதும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்தான். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அரசு விழாவாக இரண்டு நாட்கள் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் இதற்காக மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பட்டிமன்றம், கவியரங்கம், அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், இசை கச்சேரிகள் நடைபெறவுள்ளன.
அதேபோல, மாலையில் பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். அதேபோல, பல்வேறு அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு துறை சார்ந்த அறிஞர்களுக்கு ராஜராஜ சோழன் விருதை வழங்கவுள்ளனர்.
விழாவையொட்டி, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனால், தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
அன்புமணி ராமதாஸ் அறைகூவல்: மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதய விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப் பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம்... நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications