வண்டியை நிறுத்துங்க.. தஞ்சையில் உபயதுல்லா வீட்டுக்கு சென்ற ஸ்டாலின்! கலங்கிய குடும்பத்துக்கு ஆறுதல்
மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா வீட்டுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார்
தஞ்சாவூர்: திமுக முன்னாள் அமைச்சரும், திமுக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா கடந்த 19 ஆம் தேதி காலமான நிலையில், தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் உபயதுல்லாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சரும், 4 முறை திமுக எம்.எல்.ஏவுமாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்த எஸ்.என்.எம். உபயதுல்லா கடந்த 19 ஆம் தேதி காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
83 வயதாகும் உபயதுல்லா தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இறுதிச் சடங்கு
இந்த நிலையில் நேற்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான தலைவருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார்.

முதலமைச்சர் இரங்கல்
அதில். "முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த திரு. உபயதுல்லா அவர்கள்.

கழகம் வளர்த்த தீரர்
என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர். 1962-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.

அமைச்சர் உபயதுல்லா
1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் கழகச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா அவர்கள். நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றிய உபயதுல்லா அவர்கள் 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது வணிக வரித்துறை அமைச்சராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி மீது அன்பு கொண்டவர்
முத்தமிழறிஞர் மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா அவர்கள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதினையும்", இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் "பேரறிஞர் அண்ணா விருதினையும்" எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.

திமுகவுக்கு பேரிழப்பு
கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் திரு. உபயதுல்லா அவர்கள். கழகத்தின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய திரு. உபயதுல்லா அவர்களின் மறைவு கழகத்துக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகத்துக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும்.

குடும்பத்தினர், உடல் பிறப்புகளுக்கு இரங்கல்
திரு. உபயதுல்லா அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர். உறவினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று திருவாரூர் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் காரை நிறுத்தி உபயதுல்லா வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications