இதுதான் தமிழ்நாடு.. “தண்ணீர் தந்த பென்னி குக் பேத்திக்கு கண்ணீர் காணிக்கை”.. தேனியில் பேனர்!
தேனி: பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணியின் மறைவுக்கு தேனி மாவட்டம் சின்னமனூரில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நன்றிப் பெருக்கு கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்த நிகழ்வு.
கர்னல் பென்னி குக்கின் மகன் வழிப்பேத்தி திருமதி ஆல்பா மெக்கனெல் கடந்த 18 ஆம் தேதியன்று மறைந்தார். இந்த தகவல் அறிந்து, தேனி மாவட்டம் சின்னமனூரில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ளனர். "தண்ணீர் தந்தவர் பேத்திக்கு கண்ணீர் காணிக்கை" என்ற பெயரில் பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் மகன் வழிப்பேத்தி திருமதி.ஆல்பா மெக்கனெல் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் தேனி மக்கள்.
தென் மாவட்ட மக்களின் குலசாமியாக, காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார் கர்னல் ஜான் பென்னிகுவிக். முல்லைப்பெரியாறு அணைக்காக தன் உழைப்பையும், சிந்தனையையும் கொட்டி உருவாக்கிய பென்னிகுவிக், தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளை பொங்கல் வைத்து படையல் செய்து வழிபடுகின்றனர்.

பிரிட்டனில் பிறந்து வளர்ந்த பென்னி குக், பிரிட்டீஷ் இந்திய அரசாங்கத்தின் ராணுவ இன்ஜினீயராக பணியாற்றியவர். தமிழகத்தின் தென் மாவட்டமான தேனியில் முல்லை பெரியாறு அணையை வெற்றிகரமாக கட்டி முடித்து மக்களுக்குப் பயன்படக் காரணமான பென்னி குயிக்கை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்ட மக்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுவிக் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுவிக் படம் வைக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.












Click it and Unblock the Notifications