தேனியில் நடுரோட்டில் கணவரின் செயலால்.. ஆடிப்போன காதல் மனைவி.. போலீஸ் ஸ்டேசனில் ட்விஸ்ட்
தேனி: தேனி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனது ஒரு மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் மதுரை சாலையில் அழைத்து வந்தார். கலெக்டர் ஆபீஸ் அருகே வந்த போது, காதல் மனைவியை, மோட்டார் சைக்கிளில் இருந்து நடுரோட்டில் இறக்கி விட்டு கைக்குழந்தையை மட்டும் அந்த இளைஞர் தூக்கி சென்ற சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைக்கு வாழும் 2 கே கிட்ஸ் ஜோடிகள் சிலரிடம் விட்டுக்கொடுத்து செல்லும் குணமே இருப்பது இல்லை.. வெகு எளிதாக சண்டை போடுகிறார்கள். குறிப்பாக திருமணம் ஆன புதிதில் வாழ்க்கையை பற்றி புரிதல் இல்லாமல், நீ இப்படி இருக்கிறாயா.. நான் இப்படி இருப்பேன் என்று வீம்பு செய்கிறார்கள். ஆனால் உண்மையில் கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மாறிமாறி விட்டுக்கொடுத்து சென்றால் மட்டுமே வாழ்க்கை சுமூகமாக இருக்கும்.

ஒருவரை ஒருவர் காதலிக்கும் காலத்தில் ஜாலியாக சுற்றும் போது தோன்றாத விஷயங்கள் திருமணம் ஆனபின்னர் சிக்கலாக தோன்றுகிறது. தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. தனக்கு யாரும் அறிவுரை கூறக்கூடாது என்றும் ஜோடிகள் கடைசியில் விவகாரத்தில் போய் நிற்கிறார்கள். கெட்ட பழக்கம், சந்தேகம், புரிந்து கொள்ளாமல் வீம்புடன் இருப்பதுபோன்றவை குடும்பத்தை அழித்து விடுகிறது. தேனியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தேனி நகரில் இளம்பெண் தனது ஒரு மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தனது கணவருடன் பைக்கில் கலெக்டர் ஆபிஸ் அருகே மதுரை சாலையில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வந்து கொண்டிருந்த போது, அந்த பெண்ணின் கணவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடுரோட்டில் வாக்குவாதம் செய்துள்ளார். அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்த கணவருக்கு 25 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. தனது குழந்தையை வாங்கிய 25 வயது வாலிபர், மனைவியை நடுரோட்டில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். குழந்தையை அவர் தன்னுடைய பைக்கில் வைத்துக் கொண்டு போய்விட்டார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூச்சலிட்டவாறு பின் தொடர்ந்து சிறிது தூரம் ஓடிவந்தார். அப்போது அந்த வழியாக போலீஸ்காரர் ஒருவர், அந்த பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு அவருடைய கணவரை பின் தொடர்ந்து வந்தார்.
அதற்குள் அவருடைய கணவர், மோட்டார் சைக்கிளில் வேறு எங்கோ விரைந்து சென்று விட்டார். இதையடுத்து அந்த பெண்ணை போலீஸ்காரர், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இறக்கி விட்டார். அந்த பெண் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம், நடந்ததை கூறினார். மருத்துவமனை சென்று திரும்பி வந்தபோது தனது கணவர் தன்னை தாக்கி விட்டு, குழந்தையை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கிச் சென்று விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரை தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கு அந்த பெண்ணின் கணவரும் குழந்தையுடன் அமர்ந்து இருந்தார். போலீஸ் நிலையத்தில், 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்றும், குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனைவியை பாதி வழியில் இறக்கி விட்டு வந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications