தேனியிலேயே ஆபத்தான அருவி.. குளிக்க போன இளைஞர்.. உயிரையே எடுத்த செல்பி
தேனி: தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் அருவியில் குளிக் சென்ற இளைஞர், செல்பி எடுத்த போது பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.. மலைகள் நிறைந்த தேனி மாவட்டத்தில் ஏராளமான அருவிகள் உள்ளன. திரும்பியபக்கம் எல்லாம் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. இதேபோல் பல இடங்களில் திடீர் அருவிகளும் உருவாகி தண்ணீர் ஊற்று போல் ஊற்றி வருகிறது.

இதனால் பலரும் அருவிகளுக்கு சென்று குளித்து மகிழ்கிறார்கள். தேனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் குளிக்க சென்ற இடத்தில் செல்பி எடுத்த போது, தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தேனி சிவராம்நகரை சேர்ந்த குமார் காளீஸ்வரி தம்பதியின் மகன் சதீஷ்குமார் (வயது 23). இவருடைய அப்பா இறந்த நிலையில், தன்னுடைய தாய் காளீஸ்வரியுடன் வசித்து வந்தார். சதீஷ்குமார் தேனியில் உள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் ஞாயிறு அன்று தனது நண்பர்களுடன் சதீஷ்குமார் தேனி அல்லிநகரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர், நண்பர்களுடன் கோவிலுக்கு மேற்குப்புறம் உள்ள மலைப்பகுதியில் வழுக்குப்பாறை என்ற இடத்துக்கு சென்றிருக்கிறார். அந்த வழுக்குப்பாறை பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதற்கிடையே சதீஷ்குமார் அங்கு பாறையில் நின்றுகொண்டு செல்போனில் 'செல்பி' எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி பாறையில் இருந்து வழுக்கி விழுந்தார். இதில், பாறையின் இடுக்கில் உள்ள தண்ணீரில் சதீஷ் குமார் மூழ்கினார். அப்போது அவருக்கு தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதுத. இதனை பார்த்த நண்பர்கள், சதீஷை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து தேனி அல்லிநகரம் போலீசாருக்கும், தேனி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்களும், அல்லிநகரம் போலீசாரும் விரைந்து வந்தனர். இரவில் தான் சதீஷை பலத்த காயங்களுடன் மீட்க முடிந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மலையில் இருந்து தரைப்பகுதிக்கு சதீஷை கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தாய் காளீஸ்வரி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தேனி அல்லிநகரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவில் பகுதியில் உள்ள வழுக்குப்பாறைக்கு ஏராளமான சிறுவர்கள் அடிக்கடி குளிக்க செல்கிறார்கள்.. அங்கு ஏராளமானோர் குளிப்பதையும், 'செல்பி' எடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஆபத்தான பகுதியாகும். இங்கு வனவிலங்குகள் நடமாட்டமும் உண்டு.
வீரப்ப அய்யனார் கோயிலுக்கு வரும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளிக்கிறார்கள். எனவே தேனி வழுக்குப்பாறையில் சென்று குளிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். இதற்கு வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
