எடப்பாடிக்கு ஓபிஎஸ் நேரடி சவால்.. ‘ராஜினாமா பண்ணிட்டு மோத தயாரா?’ ஆதரவாளர்கள் மத்தியில் ஓப்பன் டாக்!
தேனி : கட்சி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்துவிட்டு தொண்டகளை சந்திக்கத் தயாரா என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.
அதிமுக தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பன் வீட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பதவி ஆசை இல்லாத என்னை அதற்கு ஆசைப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு தனக்கு நிர்வாகிகள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

பெருகும் ஆதரவு
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை, மதுரை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்பன் வீட்டு சொத்தா?
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஜூன் 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி என்னை பொதுக்குழுவில் கலந்து கொள்ளவிடாமல் சதி செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் சென்ற போது பூட்டி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு யார் தலைமை கழகத்தை பூட்ட அதிகாரம் கொடுத்தது?

விசுவாசம்
அதிமுக தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. ? ஜானகி அம்மாள் தன்னுடைய சொத்தை கழகத்திற்காக எழுதிக் கொடுத்தார். தலைமைக் கழகம் எனது வீடு. நான் திருடிச் சென்று விட்டேன் என்று சொல்கிறார்கள். என் வீட்டில் நான் திருடுவேனா? என்னை 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக்கினார். எனது விசுவாசம் காரணமாக 13 ஆண்டுகள் கழித்து 2014ம் ஆண்டு மீண்டும் என்னை முதல்வர் ஆக்கினார்.

நான் சொன்னதை கேட்கவில்லை
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் முழுவதும் தொகுதிகளில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன். யாரும் கேட்கவில்லை. நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது. நான் பேசினால் யாரும் பேச முடியாது.

ஓபிஎஸ் சவால்
பதவி ஆசை இல்லாத என்னை அதற்காக ஆசைப்படுபவன் என்று கூறுகிறார்கள். வேண்டுமானால், கட்சி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்யட்டும். இருவரும் கீழே போய் தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவு செய்யட்டும். மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பார்க்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications