தங்கத்துக்கு நிகராக மாறிய பூண்டு விலை.. தமிழ்நாட்டில் எங்கிருந்து அதிகமாக வருகிறது தெரியுமா?
தேனி: தங்கத்துக்கு நிகராக பூண்டு விலை மாறி உள்ளது. ஒரு கிலோ பூண்டு சென்னை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் 550 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் எங்கிருந்து அதிகமாக வருகிறது.. இப்போது என்ன பிரச்னை என்பதை பார்ப்போம்.
வாயு தொல்லையை நீக்க பூண்டு சமையலில் சேர்க்கப்படுகிறது. பிரியாணி, குழம்பு, ரசம், கறி மசலா உள்பட சமையலில் முக்கிய அங்கம் வகிப்பது பூண்டு. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் பூண்டு அதிகம் விளைகிறது. பூண்டில் தரைப்பூண்டு, மலைப்பூண்டு, சீனா பூண்டு என மூன்று வகையாக தமிழக மார்க்கெட்டில் கிடைக்கிறது.

இதில் சீனா ரகம் சற்று பெரிதாகவும் உரிக்க எளிதாகவும் இருக்கும். இந்த பூண்டில் வாசனை, காட்டம் ரசம் (எஸன்ஸ்) போன்றவை குறைவுவாகவே இருக்கும். தரைப்பூண்டு காட்டம் அதிகமாக இருந்தாலும், பெரிய சைஸ் அரிதாகவும் கிடைக்கும். அதேநேரம் மலைப்பூண்டு புகைப்போட்டு பாடம் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு வருவதோடு, மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. வாசனை, ரசம், காட்டம் என அனைத்தும் சூப்பராக இருக்கும்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலும் மலைப் பூண்டு அதிகமாக விளைகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புகிறார்கள். இதேபோல் கொடைக்கானல் பூண்டு அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். கொடைக்கானல் பூண்டுக்கு தமிழகம் முழுவதுமே பெரிய வரவேற்பு உள்ளது.
தமிழகத்தில் விளையும் பூண்டு மாநிலத்தின் தேவைக்கு போதாது. இதன் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி குறைந்ததால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனையாகி வந்தது.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் வெள்ளைபூண்டு மண்டி இருக்கிறது. கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளில் விளையும் பூண்டுகள், வடமாநிலங்களில் இறக்குமதியாகும் வெள்ளைப்பூண்டுக்கு வடுகப்பட்டியில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வடுகப்பட்டி மண்டியில் நேற்று ஒரு கிலோ வெள்ளை பூண்டு ரூ.380 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. 100 கிராம் பூண்டு ரூ.50-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.300-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது. ஆனால், சென்னை மாநகரில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. 100 கிராம் பூண்டு ரூ.50-க்கு விற்பனையானது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்று கூறிய வியாபாரிகள், அதன்பிறகு புதுப்பூண்டு வெளிமாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையத் தொடங்கும் என்றார்கள்.
வீட்டில் செய்யப்படும் சமையல் சைவமோ, அசைவமோ எதுவாக இருந்தாலும் பூண்டு இல்லாமல் சமைப்பது உணவின் ருசியை குறைத்துவிடும் என்பதால் இல்லதரிசகள் பூண்டு விலையை நினைத்து கவலை அடைந்துள்ளனர் இதற்கு முன்பு தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்தபோது, மத்திய அரசு தலையிட்டு விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுத்தது. அதேபோல், பூண்டு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications