தேனி அருகே 40 வருடம் முன்பு வீட்டை விட்டு ஓடிப்போனவர்.. தாயை காண திரும்ப எப்படி வந்தார் தெரியுமா?
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் என்பவருடைய மகன் குமார் என்பவர் பல வருடம் முன்பு பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு 12 வயதில் ஊரை விட்டு சென்றார். கடந்த 1985ம் ஆண்டு ஊரை விட்டு சென்ற குமார் அதன்பிறகு ஊருக்குவரவே இல்லை.. குமார் தற்போது புதுக்கோட்டையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு சென்று தனது தாயை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயதில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு ஊரை விட்டு செல்லும் சிறுவர்கள், பல வருடங்கள் தங்கள் பெற்றோரை பார்க்க போவது இல்லை. தன்னை என்ன நினைப்பார்கள் என்ற மனநிலை மறுபக்கம் பெற்றோரின் செயல்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக இருக்கும். அதேபோல் பெற்றோரின் அடிக்கு பயந்து ஓடிப்போனவர்களும் உண்டு. ஏதாவது தவறு செய்திருப்பார்கள். அதற்காக பெற்றோர் அடிப்பார்கள் என்று பயந்து ஊரை விட்டு ஓடிப்போனவர்களும் உண்டு. அப்படி கோபித்துக் கொண்டு சென்றவர் 40 ஆண்டுகள் கழித்து பெற்றோரை சந்தித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி ருக்குமணி. இந்த தம்பதிக்கு குமார், செந்தில், முருகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 1985-ம் ஆண்டு குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள். அப்போது, மூத்த மகனான குமாரை வேலைக்கு செல்லும்படி அவரது பெற்றோர் வலியுறுத்தினார்களாம். இதனால் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு குமார் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதற்கிடையே 12 வயதில் காணாமல் போன குமார், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
திருமணமாகி மனைவியுடன் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி கிராமத்தில் வசித்து வந்த குமாருக்கு 3 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் நடத்தி வந்த ஓட்டலை இப்போது குமார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேனிக்கு பஸ்சில் சென்றபோது அவருக்கு கடந்த கால நிகழ்வுகள் தன் கண் முன்னே வந்து சென்றுள்ளது.
இதையடுத்து தனது குடும்பத்துடன் அவர் கதிர்நரசிங்கபுரத்தில் இறங்கியிருக்கிறார். பின்னர் தனது தாய் வசிக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். வீட்டில் வயதான நிலையில் இருந்த தனது தாய் ருக்குமணி மற்றும் பாட்டியை பார்த்தார். அப்போது, 40 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிச்சென்ற உனது மூத்த மகன் குமார் வந்துள்ளேன் என்று தன்னை தாயிடம் தெரிவித்தார்.
தனது மனைவி, மகள்களையும் அறிமுகம் செய்து வைத்தார். ஒருகணம் ஆச்சரியத்தில் உறைந்த ருக்குமணி, மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்தியபடி மகனை கட்டி தழுவினார். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications