"ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி.. அதுக்கு வேந்தர்.. வேற யாரு? நம்ம மோடி தான்”.. ஸ்டாலின் சுளீர்!
தேனி: ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடி தான் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
ஸ்டாலின் பேசுகையில், "பிரதமர் மோடி அவர்களே... திராவிட மாடலில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது! வளர்ந்து கொண்டிருக்கிறது! வளர்ந்து கொண்டே இருக்கும்! இதை எந்த மோடி மஸ்தான் வித்தைகளாலும் தடுக்க முடியாது! அதற்குப்பிறகு, வழக்கம்போல் குடும்ப அரசியல், ஊழல் கட்சி என்று தேய்ந்துப் போன ரெக்கார்டையே போட்டார். இதற்கு நான் எத்தனையோ முறை விளக்கம் சொல்லிவிட்டேன்.

ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி: உண்மையாக, ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது! ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்! தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்கிற்கு வரவும், பி.எம். கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்ட உத்தமர்தான் மோடி! வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பா.ஜ.கவுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா?
அடுத்து, தமிழ்ப் பண்பாட்டிற்குத் தி.மு.க எதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. உங்கள் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் படிக்கக் கூடாது, புத்தங்களை வாங்கி படிக்க வேண்டும்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" இதுதான் தமிழர் பண்பாடு! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" இதுதான் தமிழர் பண்பாடு! பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? சாதியாலும், மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் நீங்கள் தி.மு.கவை குற்றம் சாட்டலாமா?
மணிக்கணக்கில் பேச முடியும்: இப்போதும், சமூகநீதியைப் பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று கேலி செய்து பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? பத்தாண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து கொண்டு, சாதனையாக எதையும் சொல்ல முடியாமல் இப்படி மக்களைப் பிளவுப்படுத்திப் பேசுகிறோம் என்று வெட்கப்பட வேண்டும் நீங்கள்! பத்தாண்டு காலம் ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வேதனைகளை நம்மால் மணிக்கணக்கில் பேச முடியும்!
"தமிழ்நாடு வேண்டாம்" என்று புறக்கணித்த மோடிக்கு - ஒரே முழக்கத்தில் நாம் சொல்ல வேண்டியது, "வேண்டாம் மோடி!" என்பதுதான். தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால் -தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
மோடி வாஷிங் மெஷின்: மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். "மேட் இன் பி.ஜே.பி." வாசிங் மெஷின் அது! மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சியின் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் டிடிவி தினகரன்." என விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications