கதையே மாறுதே! தேனியில் ஓபிஎஸ் போட்டி? டெல்லிக்கு போக பிளான்.. அப்போ ரவீந்திரநாத்? ஆஹா!
தேனி: வரும் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தேனியின் சிட்டிங் எம்.பியான ஓபி ரவீந்திரநாத்தும் இதை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதி, என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், பாஜகவுடன் தான் கூட்டணி, மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் என அடித்துக் கூறி வருகிறார் ஓபிஎஸ்.

தேனி தொகுதியில் யார்?: அதிமுகவுக்கு தற்போது கையில் உள்ள லோக்சபா தொகுதி தேனி தான். தேனியில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதி, பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கப்பட்டால் ஓபி ரவீந்திரநாத் அங்கு மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, தேனி லோக்சபா தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும் பேச்சுகள் உலவி வருகின்றன. தேனி தொகுதியில் நிற்கப்போவது யார் என பெரும் விவாதமே நடக்கிறது.

ஓபி ரவீந்திரநாத் சொன்ன பதில்: இந்நிலையில், தேனி மதுரை சாலையில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையம் அருகே சாலை அமைக்கும் பணியை தேனி எம்.பி ரவீந்திரநாத் பார்வையிட்டார். அப்போது ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனுடன் இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தேனி தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்புள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓ.பி ரவீந்திரநாத், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், யார் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்பதை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்ட போது நான் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் தேர்தலை சந்திப்பேன்.
ஓபிஎஸ் போட்டியிடுவார்: தேனி தொகுதியை பொறுத்தவரை வரும் தேர்தலில் திமுகவுடன் தான் போட்டி. கூட்டணிக்காக பாஜகவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது. இரண்டு, மூன்று நாட்களில் கூட்டணி முடிவுகள் தெரியவரும். மார்ச் 4ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். அதற்குள் முக்கிய நகர்வுகள் நடைபெறும்.” எனத் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தேனியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என கேட்டதற்கு, “மக்களும், தொண்டர்களும் விரும்பினால் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் போட்டியிடுவார்” எனத் தெரிவித்துள்ளார் அவரது மகன் ஓபி ரவீந்திரநாத்.
டெல்லிக்கு ஜாகையை மாற்றும் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிபோன நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டசபைக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார் ஓபிஎஸ். இதனால் தனது ஜாகையை டெல்லியை நோக்கி ஓபிஎஸ் திருப்பக்கூடும் இதனால், தேனி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி, ஓபிஎஸ் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டால் அவரது மகன் ஓபி ரவீந்திரநாத், தென் மாவட்டங்களில் வேறு தொகுதியில் களமிறங்கக்கூடும், அல்லது, ராஜ்யசபா உறுப்பினர் ஆகக்கூடும் என்றும் தேனி அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்பத் தொடங்கியுள்ளன.
டிடிவி தினகரன்?: முன்னதாக, தேனி மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபி ரவீந்திரநாத், தென் மாவட்டங்களில் எந்தத் தொகுதியில் வேண்டுமென்றாலும் களமிறங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications