மதுரை முருகேஸ்வரி மாஸ்டர் பிளான்.. ஆசையில் போன நண்பர்களுக்கு கிடைத்த மல்லிகைப்பூ.. பறிபோன 10 லட்சம்
தேனி: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஒத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. திருமங்கலத்தில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் பொன்ராஜ்.. இருவரும் நண்பர்கள். இவர்களுக்கு முருகேஸ்வரி என்ற பெண் அறிமுகம் ஆனார். அழகர்சாமிக்கும், அவரது நண்பர் பொன்ராஜூக்கும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை அறிந்த முருகேஸ்வரி, அவர்களை மந்திரவாதி ஒருவரிடம் அழைத்து சென்றார். அங்கு அவர்கள் 10 லட்சத்தை பறிகொடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 51 வயதாகும் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர், திருமங்கலத்தில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.

மதுரையில் பழக்கம்
மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு சேர்த்துவிடும் ஏஜெண்டாகவும் வேலை செய்து வருகிறார். அந்த வகையில் முருகேஸ்வரி, அழகர்சாமியின் நிறுவனத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம் ஆகும். இதன்மூலம் அவருடன், அழகர்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சதுரங்கவேட்டை
இந்தநிலையில் அழகர்சாமிக்கும், அவரது நண்பர் பொன்ராஜூக்கும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. இதனை அறிந்துக்கொண்ட முருகேஸ்வரி, தனக்கு தெரிந்த நபர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருக்கிறார் என்றும், மாந்திரீக பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியிருக்கிறார்.. இதனை நம்பிய 2 பேரும், மாந்திரீகம் செய்யும் பூசாரியிடம் அழைத்துச்செல்லும்படி கூறினர்.
பணம் அனுப்பினார்கள்
இதையடுத்து 2 பேரும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மற்றும் ரொக்கமாக ரூ.7 லட்சத்து 42 ஆயிரம் என மொத்தம் ரூ.9 லட்சத்து 84 ஆயிரத்தை சித்தார்த்தனிடம் கொடுத்தார்களாம். பணத்தை பெற்றுக்கொண்ட சித்தார்த்தன், கடந்த 1-ந்தேதி தனது வீட்டில் பூஜை நடத்தவுள்ளதாகவும், அதில் பங்கேற்க வருமாறும் கூறினாராம்.
மந்திரவாதி பூஜை
அவர் கூறியபடி கடந்த 1-ந்தேதி அழகர்சாமியும், பொன்ராஜூவும் டி.கள்ளிப்பட்டியில் உள்ள சித்தார்த்தனின் வீட்டுக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே பூஜை செய்வதற்காக நல்லெண்ணெய், நெய், எலுமிச்சை பழங்கள், குங்குமம், திருநீறு, பூக்கள் உள்ளிட்டவை தயாராக இருந்தன. இதேபோல் சித்தார்த்தனின் மகன் விஸ்வாமித்ரனும் (21) அங்கு இருந்தாராம். இதைத்தொடர்ந்து சித்தார்த்தன், தனது மகனுடன் சேர்ந்து சில பூஜைகளை செய்தார். அவர்களுக்கு எதிரே அழகர்சாமியும், பொன்ராஜூம் அமர வைத்துள்ளார். பூஜைகளை முடித்தபிறகு 2 பேரிடமும் சித்தார்த்தன் கைப்பை ஒன்றை கொடுத்தார். அந்த பையில் மல்லிகைப்பூ வாசனை வந்தது.
மல்லிகைப்பூ
இதையடுத்து வீட்டுக்கு சென்ற 2 பேரும், தங்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைத்துவிடும் என்ற ஆசையில் சித்தார்த்தன் கொடுத்த கைப்பையை திறந்து பார்த்துள்ளனர். ஆனால் அந்த பைக்குள் வெறும் மல்லிகைப்பூ மட்டுமே இருந்தது. அப்போது தான் முருகேஸ்வரி உள்பட 3 பேரும் சேர்ந்து தங்களை மோசடி செய்தது அழகர்சாமிக்கும், பொன்ராஜூவுக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சித்தார்த்தன் வீட்டுக்கு சென்று, தங்களது பணத்தை திருப்பித்தருமாறு கேட்டிருக்கிறார்கள்.
பணம் தர மறுப்பு
அப்போது சித்தார்த்தனும், அவரது மகன் விஸ்வாமித்ரனும் சேர்ந்து, அவர்கள் 2 பேரையும் வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கேட்டு வந்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தார்களாம். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த 2 பேரும், பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
மந்திரவாதி கைது
அதன்பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, டி.கள்ளிப்பட்டியில் இருந்த சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விஸ்வாமித்ரனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த முருகேஸ்வரியை தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், சித்தார்த்தன் இதுபோன்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications