தோத்தாலும் ஜெயிச்சாலும்.. நாம் தமிழர் ஓட்டு விஜய்க்கு போகுமா? வந்து விழுந்த கேள்வி.. சீமான் நறுக்..!
தேனி: தவெக தலைவர் விஜய் உடன் இருப்பவர்கள் அவரை ரசிப்பார்கள், ஆனால் எனக்கு தான் வாக்கு செலுத்துவார்கள், நாதக வாக்குகள் விஜய்க்கு போயிடும்னு சொல்ல முடியாது எனவும், ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறுவது அவரின் பெருந்தன்மை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தவெக எனும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று முன் தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.
இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், விஜயின் கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என கூறினார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் உடன் இருப்பவர்கள் அவரை ரசிப்பார்கள், ஆனால் எனக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தேனி மாவட்டம் தேனியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான்," இந்தியாவிலேயே தொடர்ந்து தனித்து நிற்கக்கூடிய கட்சி, பலமுறை தோல்வி கண்ட பிறகும் தனித்து நிற்கின்ற ஒரே கட்சி நாம் தமிழர் தான். இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்துகிற மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கின்றது. ஆனால் எங்கள் வரியை பெற்றுக்கொண்டு எங்களுக்கே திரும்பி தர மறுக்கிறது.
பாஜகவும், காங்கிரசும் கட்சிகள் தான் வேறு அவர்களின் பாலிசி ஒன்று தான், என் இனத்தில் எதிரி காங்கிரஸ் என் குலத்தின் எதிரி பாஜக தான். நடிகர்கள் விஜய், ரஜினி கமல் ஆகியோர்கள் தங்களது ரசிகர் மன்றத்தில் உள்ள ரசிகர்களை சந்தித்தார்கள் நான் ரசிகர்களை சந்திக்காமல் 36 லட்சம் வாக்குகளை பெற்றேன். தா.வெ.க தலைவர் விஜயுடன் இருக்கும் பாதி ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள் விஜய் அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் எனக்கு தான் வாக்கு செலுத்துவார்கள்.
நாதக வாக்குகள் விஜய்க்கு போயிடும்னு சொல்ல முடியாது. ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறுவது அவரின் பெருந்தன்மை கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். யார் யாருடன் கூட்டணிக்கு செல்வது என்பது அவர்களின் உரிமை ஆனால் நாங்கள் என்றுமே தனித்து தான் போட்டியிடுவோம். ஆட்சி மாற்றம் ஆள் ஏமாற்றம் என்பது எங்கள் கொள்கை இல்லை அடிப்படை அரசியல் மாற்றம் என்பது தான் எங்களின் கொள்கை.
நான்கு, ஐந்து சீட்டுகள் பெறுவது தான் எங்கள் இலக்கு என்றால் ஜெயலலிதா, மோடி அழைத்த போதே சென்றிருப்பேன் நான் நாட்டுக்காக வந்தவன் 2026-ல் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications