வடிவேலுவின் உடல் தானத்தால் தந்தைக்கும் கண் பார்வை கிடைக்கப்போகுதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தேனி: உடல் உறுப்புகளை தானம் செய்து அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் வடிவேலுவின் உடலுக்கு அரசு சார்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த வடிவேலின் தந்தை கண் பார்வையின்றி தவித்து வருவதால் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து கண் பார்வையைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த தனசேகர பாண்டியன் - அன்ன பாக்கியம் தம்பதியின் மகன் வடிவேலு (37). தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 23ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாடு குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கினார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், மூளைச்சாவு அடைந்து நேற்று உயிரிழந்தார். அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் 6 பேரின் உயிரை காப்பாற்ற பயன்படுத்தப்பட இருக்கிறது.
வடிவேலுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சின்னமனூருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேரில் சென்று தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தினர். சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இறுதி அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மூளைச்சாவு அடைந்த வடிவேலின் உடல் உறுப்புகளை தானமாக அளித்த அவரது மனைவி, தாய், சகோதரியின் தியாக உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம். கடந்த 23ஆம் தேதி உடல் உறுப்பு தான தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இனிமேல் உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தார். மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் அல்லது அந்த நிலையில் உள்ள அதிகாரிகள் மரியாதை அளிப்பார்கள் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று வடிவேலின் உடலுக்கு நானும், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளோம். உயிரிழந்த வடிவேலின் தந்தையும் கண் பார்வையின்றி தவித்து வருவதை அறிந்தோம். அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து கண் தானம் மூலம் பார்வையைத் திரும்பப் பெற இயலுமென்றால் அவரது பெயரையும் ட்ரான்ஸ்ப்ளான்ட் கமிட்டியில் இணைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தும், பலருக்கு உயிர் கொடுத்திருக்கும் இளைஞர் வடிவேலுவுக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், எல்.கே.ஜி படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். வடிவேலின் தந்தை தனசேகர பாண்டியனுக்கு கிளைக்கோமா நோய் பாதிப்பால் கண்பார்வை பறிபோனது. தந்தையின் கண் பார்வை பறிபோனதால், சிறு வயதிலேயே வேலைக்குச் சென்ற வடிவேல், தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ வரை படித்து அரசுப் போட்டித் தேர்வில் வென்று அரசு வேலையும் பெற்றவர்.
வடிவேலுவின் அப்பா தனசேகர பாண்டியன் கடந்த 30 ஆண்டுகளாக கண் பார்வை இன்றி சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது மகன் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில், தனது ஒரு கண் பார்வையையாவது சரி செய்ய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர். அவரது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications