ஆஆ.. சிறுத்தையின் தோலை மாடியில் காயவைத்த எக்ஸ் கவுன்சிலர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்
தேனி: தேனியில் சிறுத்தையின் தோலை மொட்டை மாடியில் காயவைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி தலைமறைவாகியுள்ளார்.
தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலராவார். இந்நிலையில் இவர் வீட்டின் மாடியில் புலி தோல் ஒன்று காயவைக்கப்பட்டு இருப்பதாக கடந்த 18ம் தேதி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தகவலின் நம்பகத்தன்மை குறித்து விசாரித்தது அது உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினருடன் துரைப்பாண்டியின் வீட்டுக்கு வனத்துறையினர் சென்றுள்ளனர்.

தலைமறைவு
ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டின் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுத்தையின் உடல் மஞ்சள் பூசப்பட்டு காயவைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மருத்துவர்களின் உதவியுடன் அந்த தோல் மீட்கப்பட்டது. இது சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக இவ்வாறு காயவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் இந்த சிறுத்தை எப்போது வேட்டையாடப்பட்டது. யார் இதனை வேட்டையாடியது? உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அறிந்த துரைப்பாண்டியன் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.

உடந்தையாக மனைவி
இதனையடுத்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். ஆனால் காவல்துறையினர் கண்ணில் துரைப்பாண்டியன் தொடர்ந்து மண்ணை தூவி வந்துள்ளார். இதனையடுத்து இன்று அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய அவரது மனைவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து இவரிடம் நடத்திய விசாரணையில் மலையடிவாரத்தில் சிறுத்தை இறந்து கிடந்ததாகவும் அதனை எடுத்து தோலை உரித்து உடல் பாகங்களை மனைவியுடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்தியதாகவும் கூறியுள்ளார்.

விசாரணை
ஆனால் அவர் கூறியதை வனத்துறையினர் மறுத்துள்ளனர். ஏனெனில் காயம்பட்ட சிறுத்தைகள் பாதுகாப்பாக இருக்க அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என்றும் எனவே துரைப்பாண்டியன் சொல்வதை போல மலையடிவாரத்திற்கு வராது என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து துரைப்பாண்டி தேனி லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொடுத்த தகவலின்படி இவருக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர்
இதேபோல தேனியின் பெரியகுளம் கைலாசப்பட்டி அருகே உள்ள சொர்கவனம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்க முயன்றபோது வனத்துறை அதிகாரி ஒருவரை கடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதனையடுத்து அடுத்தநாள் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பியின் தோட்டத்தில் இந்த சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது மற்றொரு வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சிறுத்தை தோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications