பிரதமரின் உதவித்தொகை .. இப்படி எல்லாமா நடக்குது.. வாட்ஸ் அப் லிங்கை தொட்டாலே மொத்தமாக முடிந்துவிடும்
தேனி: வாட்ஸ்-அப் பயன்படுத்தும் நபர்களின் செல்போன் எண்களுக்கு, பிரதமரின் உதவித்தொகை திட்டத்தை புதுப்பித்தல் தொடர்பாக ஒரு இணையதள இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தியை மர்ம நபர்கள் அனுப்பி வலை விரிக்கிறார்கள். எனவே பிரதமரின் உதவித்தொகை பெயரில் மோசடி வலை விரிக்கும் கும்பல் குறித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தேனி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மொபைலுக்கு தினமும் பல ஆஃபர்களை வங்கிகள் பெயரில் சதிகாரர்கள் ஆன்லைனில் அனுப்புகிறார்கள். இதேபோல் அரசுகளின் பெயரிலும், அரசின் திட்டங்களிலும் பெயரிலும், வெளிநாட்டு வேலைகள் என்ற பெயரிலும் அனுப்புகிறார்கள். பரிசு விழுந்தததாக அனுப்புவது எல்லாம் பழசு என்கிற நிலையில், போதைப்பொருள் கடத்தி வந்ததாக ஆன்லைனில் கைது செய்வது போல் ஏமாற்றுவது, பெண்களின் அந்தரங்க படங்களை அனுப்பி லிங்கை கிளிக் செய்ய வைத்து மார்ப்பிங் செய்து பணம் பறிப்பது, ஆதார் ஓடிபி கேட்டு ஏமாற்றுவது என இணையவழியில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இவர்களின் பல்வேறு யுக்திகளால் முதல் முறை மக்கள் ஏமாறும் போதே, விழிப்புடன் எச்சரிக்கும் போலீசார், மோசடி நபர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை விவரிக்கிறார்கள். வேலைவாய்ப்பு, பங்குச்சந்தை முதலீடு, பரிசுக் கூப்பன், குலுக்கலில் பரிசு என கம்பிகட்டும் கதைகளை நம்பும் வகையில் கூறி ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். வெளிநாட்டு தூதரகங்கள் பெயரில் கூட போலி மின்னஞ்சல் அனுப்பி ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் பிரதமரின் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, மின் கட்டணம் செலுத்துவது, வங்கி கணக்கு முடக்கம், கூகுள் பேவில் கூடுதல் பணம் அனுப்பியதாக நம்பவைத்து பணம் பறிப்பது என பல்வேறு வழிகளில் பணத்தை பறிக்கிறார்கள்.
குறிப்பாக தற்போத அரசு திட்டங்களின் பெயரிலும் மோசடி கும்பல்கள் தங்களின் கைவரிசைகளை காட்டி வருவது அதிகரித்தள்ளது.சமீப காலமாக பிரதமரின் உதவித்தொகை திட்டங்களின் பெயரில் வலைவிரிப்பது அதிகமாக உள்ளது.. பிரதமரின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவி தொகை பெயரில் மோசடி நடக்கிறது. வாட்ஸ்-அப் பயன்படுத்தும் விவசாயிகளின் செல்போன் எண்களுக்கு, பிரதமரின் உதவித்தொகை திட்டத்தை புதுப்பித்தல் தொடர்பாக ஒரு இணையதள இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தியை மர்ம நபர்கள் அனுப்புகிறார்கள். அதை திறந்து பார்த்து பதிவிறக்கம் செய்பவர்களின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள விவரங்கள் திருடப்படுகின்றன.
இதேபோல் மாணவ, மாணவிகளுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொள்கிறார்கள். தங்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகையை அனுப்ப உள்ளதாகவும், அதற்கான சரிபார்ப்பு பணிக்காக உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து கணிசமான தொகையை அனுப்புமாறும் கூறுகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நபரிடமும் சில ஆயிரம் பணத்தை கறந்து விட்டு திருப்பி அனுப்பாமல் மோசடி நடக்கிறது. இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, " சைபர் குற்றங்கள் பல்வேறு வகையில் இதுபோல் நடக்கிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித்தொகை தொடர்பான மோசடி குறித்து தேனியில் இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அதே நேரத்தில் மாணவர்களுக்கான உதவித்தொகை தருவதாக கூறும் மோசடி தொடர்பாக சில புகார்கள் வந்திருக்கிறது. அரசு திட்டங்கள், உதவித்தொகை எல்லாம் அந்தந்த துறை சார்ந்த இணையதள முகவரியில் தான் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மோசடி நபர்கள் கூறும் இணையதளங்களில் சென்று எந்த விவரங்களையும் பதிவிடக்கூடாது. வங்கிக் கணக்கை சரிபார்ப்பது, உறுதி செய்வது என்று எந்த வகையில் கேட்டாலும் பணம் அனுப்பக்கூடாது. தேவையற்ற செயலிகளை செல்போன்களில் டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும். சைபர் குற்றங்கள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் தான் இதுபோன்ற மோசடி வலைகளில் சிக்காமல் தப்பிக்க முடியும் என்றார்கள்.












Click it and Unblock the Notifications