தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்
தேனி: தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் 18.56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது... இதெல்லாம் வழக்கமாக பறிமுதல் செய்வதுதான் என்றாலும், பால் வியாபாரி, கொத்தனார், மாடு வாங்கச் சென்றவர் போன்றவர்களிடம் இந்தத் தொகை கைப்பற்றப்பட்டதுதான் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி - புள்ளிமான்கோம்பை சாலையில் அமைந்துள்ள டி.சேடபட்டி விலக்கு அருகே, நிலைக் கண்காணிப்புக் குழுத் தலைவர் நாகராஜ் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தேனி பறக்கும் படை
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா குன்னத்துப்பட்டியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவரை வழிமறித்து சோதனையிட்டனர்.
அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 1.80 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் கொத்தனார் வேலை செய்து வருவது தெரியவந்தது..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஸ்ரீரங்கபுரத்தில் வசிக்கும் சரவணன் என்பவரது வீட்டைக் கட்டுவதற்காக ஒப்பந்தம் பேசி, அதற்கான முன்பணமாக இந்தப் பணத்தைப் பெற்று வருவதாகத் தெரிவித்தார். இருந்தாலும் அதற்கான முறையான ஆதாரங்கள் இல்லாததால் அந்தத் தொகை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
கொத்தனார் - பால் வியாபாரி
இதேபோல், சின்னமனூர் அடுத்த வேப்பம்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் மகா விஷ்ணு தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த 63 வயதான தெய்வம் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்த 93 ஆயிரம் ரூபாய்க்கு முறையான ஆவணங்கள் இல்லை.
அவரிடம் விசாரித்தபோது, மாடு வாங்குவதற்காக இந்தப் பணத்தைக் கொண்டு சென்றதாக சொன்னார்.. ஆனாலும், விதிமுறைப்படி அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உத்தமபாளையம் கிளைக் கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
பைனான்ஸ் கம்பெனி
போடி பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. வீரபாண்டி - தாடிச்சேரி மெயின் ரோட்டில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அருண்குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், சிவகங்கை மாவட்டம் தர்மாபட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் வெற்றிச்செல்வன் சிக்கினார்.
கம்பத்தில் உள்ள ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வரும் அவர், தாடிச்சேரி பகுதியில் வசூலித்த 73 ஆயிரம் ரூபாயை ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்துள்ளார். அந்தத் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டு போடி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அடமான நகைகள்
அனைத்தைவிடவும் பெரிய தொகையாக, போடி சிலமலை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையில் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நவநீத பாண்டியன் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் 15 லட்சம் ரூபாய் சிக்கியது. சிலமலையைச் சேர்ந்த 57 வயதான பால் வியாபாரி செல்வராஜ், போடியில் தான் அடகு வைத்திருந்த 25 சவரன் நகைகளைத் திருப்புவதற்காக இந்தப் பணத்தை பைக்கில் கொண்டு வந்துள்ளார்.
ரசீது வைத்திருந்தாலும் இவ்வளவு பெரிய தொகைக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனையடுத்து, 15 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைத் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளும், பறிமுதல்களும், பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் தேர்தல் பிரிவின் தீவிரத்தை உணர்த்துகின்றன...!!
தேர்தல் நடத்தை விதிகள்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
குறிப்பாக, 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை எடுத்துச் செல்லும் போது, அந்தப் பணத்திற்கான ஆதாரங்கள், வங்கிப் பரிவர்த்தனை ரசீதுகள் அல்லது அது எதற்காகக் கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான முறையான ஆவணங்களைக் கையோடு வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடந்த சோதனைகளில், நகை திருப்புவதற்காகவோ அல்லது மாடு வாங்குவதற்காகவோ கொண்டு செல்லப்பட்ட பணம் கூட ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, தேவையற்ற அலைச்சல்களையும் சட்ட சிக்கல்களையும் தவிர்க்க விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications