ஓபிஎஸ்சின் சொந்த ஊரில் மாஸ்காட்டிய டிடிவி தினகரன்.. மீட்டிங்கில் இணைந்த புள்ளி.. பேச்சின் பின்னணி
ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் மாஸ் காட்டி பேசியிருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
தேனி: ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் மாஸ் காட்டி பேசியிருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி திமுக அல்ல டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்-ஸூம் தான் என்று கூறினார். இதன் மூலம் ஓ பன்னீர்செல்வத்திற்கு நியாயம் கேட்கும் நிலைப்பாட்டிலேயே அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பொதுக்குழு செல்லும் என்கிற நிலையில், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லும் என்று உற்சாகமாக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், அன்றைய கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்கிறார்கள்.
ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ, பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறியது.

ஓபிஎஸ் ஆவேசம்
நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் என்னையும், சின்னம்மா (சசிகலா), டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கக்கூடாது என்று சொல்வதற்கு, அதிமுக ஒன்றும் எடப்பாடி பழனிசாமியின் தாத்தா கட்சி இல்லை என்று காட்டமாக கூறினார். மேலும் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், "ஆணவத்தின் உச்சத்தில் எடப்பாடி இருக்கிறார். அந்த ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களுக்கு இருக்கிறது. அந்த தீர்ப்பும் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இந்த தீர்ப்பு வந்தபின்னர் தான் எங்கள் தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எடப்பாடி அணி தான் திமுகவின் ஏ டு இசட் டீம். எங்களை நோக்கி எதாவது தவறு கூற முடியுமா? ஆயிரம் உள்ளது அது இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி உடைந்துவிடக்கூடாது என இதுவரை பொறுமை காத்தோம். போகப்போக தெரியும்.. மக்களை சந்திக்கும் போது ரகசியங்களை வெளியிடுவோம்" என்றார்.

தேனியில் பேச்சு
இப்படி ஓ பன்னீர்செல்வம் நேற்று காலையில் பேசியிருந்த நிலையில், மாலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தியதுடன், அதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் பேசியிருந்தார். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக-வுக்கு பயந்து கொண்டு அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி பலியாக்கியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி திமுக அல்ல.. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்-ஸூம் தான் எடப்பாடிக்கு போட்டி. துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கலாம். சரியான நேரத்தில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார்.

மூவரும் சேருவார்களா?
இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு எடப்பாடி பழனிசாமி குதித்து கொண்டிருப்பதாகவும், இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் உள்ளதாகவும், ஜனநாயக வழியில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்றும் டிடிவி தினகரன் கூறினார். டிடிவி தினகரனின் இந்த பேச்சை கவனித்தால், ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது தெரிவதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரும் விரைவில் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

தென் மாவட்டங்கள்
ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து தனி அணியாகவோ அல்லது தனிகட்சியாக மாறினால், தென் மாவட்டத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சொல்லும் மூத்த பத்திரிக்கையாளர்கள், இதை எப்படி எடப்பாடி பழனிசாமி தடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே சசிகலா , டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்கலாம் என்ற தனது நிலைப்பாட்டை கூறிவந்தது குறிப்பிடத்தக்கது .












Click it and Unblock the Notifications