10 லட்சம் இருந்தாலே.. தினமும் 5 ஆயிரமா? நகைக்கடன் விதியால் உண்மையில் யாருக்கு லாபம்?
தேனி: உங்களிடம் 10 லட்சம் முதல் 25 லட்சம் பணம் இருந்தால், நகைகளை வங்கியில் திருப்பி வைக்க பணத்தை மாற்றிவிட்டு தினமும் பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும் என்று கந்துவட்டிக்காரர்கள் குஷியில் இருக்கிறார்கள்.. வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்கள் மொத்தமாக திருப்பிவிட்டே மறுஅடகு வைக்க முடியும் என்கிற உத்தரவின் காரணமாக வங்கி பகுதியில் பணத்தை மாற்றிவிட்டே பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும் என்கிறார்கள்..
தேனி பக்கம் ஒருவர் 2 லட்சத்திற்கு நகையை அடகு வைத்துள்ளார். அதை திருப்பி மறு அடகு வைத்து மறு நாளே பணத்தை திரும்ப போய் கந்துவட்டிக்காரர்களிடம் பணத்தை கொடுத்தால் 1500 ரூபாய் தர வேண்டியதிருப்பதாக சொல்கிறார்கள். தேனி மட்டுமல்ல தற்போது உள்ள நடைமுறையால் எல்லா ஊர்களிலும் பணத்தை மாற்றிவிட்டாலே பல ஆயிரங்களை தினமும் சம்பாதிக்க முடியுமாம்.

உதாரணத்திற்கு ஒருவரிடம் 25 லட்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அதில் 2 லட்சத்திற்கு 1500 ரூபாய் என்றால், தினமும் 10 பேருக்கு பணத்தை மாற்றிவிட்டாலே தினமும் 15000 கிடைத்துவிடும்... ஒரு மாதத்திலேயே கிட்டத்தட்ட 50000 வரை அசால்ட்டாக சம்பாதிக்க முடியுமாம்.. வேலைக்கே போகாமல், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே நகையை மற்றவர்கள் திருப்பி வைக்கும் போது உதவி செய்தாலே இவ்வளவு தொகையை அவர்கள் பார்க்க முடியும் என்கிறார்கள்..
கந்தவட்டிக்கு கடன் வாங்கித்தான் நகையை மாற்றி அடகு வைக்க முடியும் என்கிற நிலையில் தான் ஏழை மக்கள் இருக்கிறார்கள். ஏழை மக்கள் யாராலும் ஒரே ஆண்டில் வட்டியையும் அசலையும் கட்டி நகையை திருப்பிவிட முடியாது. அந்த பணத்தை தெரிந்தவர்கள் தராவிட்டால் கந்துவட்டிக்காரர்களிடம் கேட்டுத்தான் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கனரா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் நகை கடன் வாங்கினால் அதை திருப்பும் போது மொத்த பணத்தை கட்டி, வட்டியையும் கட்டி மறு அடகு வைக்க வேண்டியதிருக்கும்..
அதேநேரம் ஒரு சில தனியார் வங்கிகளில் அந்த நடைமுறை இல்லை.-அவர்களே பணத்தை கட்டி நகைகளை அடகு வைக்கவும் திருப்பி வைக்கவும் உதவுகிறார்கள்.. இதனால் வட்டி சற்று கூடுதலாக இருந்தாலும்,பொதுத்துறை வங்கிகளுக்கு பதில் தனியார் வங்கிகளில் அடகு வைத்ததால் நகையை காப்பாற்ற முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மேலும் பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் நகைக்கடனுக்கு அதிக பணம் தரப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களால் பொதுத்துறை வங்கிகளில் நகை அடகு வைப்பதை குறைத்துவிட்டு, தனியாரில் அடகு வைப்பது அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகிறது..
ரிசர்வ் வங்கி மக்களை கடைசி வரை கடன்காரர்களாக இருக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த முடிவினை எடுத்திருக்கிறது. அப்போது தான் எப்படியாவது கடனை கட்டி நகையை திருப்புவார்கள். கடைசி நாளில் வட்டியை கட்டி திரும்ப வைத்து வங்கிகளுக்கு லாபம் தருவதை தடுத்து, பொதுமக்களை கடன் என்ற பள்ளத்தில் இருந்து இந்த முடிவால் சரி செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி நினைத்தது. ஆனால் அந்த முடிவு உண்மையில் ஏழைகளுக்கு பாதகமாகவும், பொதுத்துறை வங்கிகளுக்கும் பாதகமாகவும், கந்துவட்டிக்காரர்களுக்கு சாதமாகவும் மாறி உள்ளது. இதன் மூலம் தனியார் வங்கிகளுக்கு சாதகமாகவும் மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications