பாஜக பூத் கமிட்டி மாநாடு.. நாளை நெல்லை வரும் அமித் ஷா.. நயினார் நினைத்தது நடக்குமா?
நெல்லை: பாஜக சார்பில் நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இந்த மாநாடு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்காக தச்சநல்லூரில் நடைபெற உள்ளது.
நெல்லையில் நாளை 22 ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. நெல்லை தச்சநல்லூரில் இந்த பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்ட மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தர உள்ளார். இதையொட்டி பூத் கமிட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது வருகின்றன. கடந்த சில நாட்களாகவே மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருப்பதால் மாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார்
மத்திய அமைச்சர் அமித்ஷா வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அமித்ஷாவுடன் வரவுள்ள மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் பயணிக்கும் 3 ஹெலிகாப்டர்களுக்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. ஆனால் ஒத்திகை நேரத்தில், அந்த பகுதியில் மரங்கள் அதிகமாக இருப்பதால், 3 ஹெலிகாப்டர்களையும் ஒரே நேரத்தில் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டு, இறக்க முடியாமல் திரும்பிப் புறப்பட்டன. இந்த சிக்கலை தொடர்ந்து, மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானம் மற்றும் மாவட்ட ஆயுதப்படை மைதானம் ஆகிய 2 இடங்களில் புதிய ஹெலிபேடு அமைக்க வழிகள் ஆராயப்பட்டு வந்தனர். இந்த இடங்களில் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்தன. இதில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நாளை மதியம் சரியாக 3 மணியளவில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்ன மாதிரியான திட்டங்கள்
மாநாட்டை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் நேற்று இதனை பார்வையிட்டு நிர்வாரிகளுக்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆலோசனைகள் வழங்கி வருகிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் அதன் முன்னேற்பாடாக பாஜக சார்பில் இந்த பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலில் என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தென் மாவட்டங்களில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு அதிக வாக்குகள் இருக்கின்றது என்பதால் அதனை இன்னும் அதிகரித்து அதிமுக பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த நயினார் நாகேந்திரன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நயினார் நாகேந்திரனின் சொந்த ஊர் என்பதால் அங்கு தனது பலத்தை காண்பிக்க அவர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications