அரசுக்கே அடங்காத நெல்லை மணல் மாஃபியா.. மூட்டை மூட்டையாக சிக்கிய கடல் மண் - கொட்டம் அடக்கப்படுமா?
திருநெல்வேலி: மத்திய, மாநில அரசுகள் விதித்த தடையை மீறி கடல் மணல் கடத்திய தனியார் நிறுவனத்திடம் இருந்து மூட்டை மூட்டையாக மணல் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுக்கா குட்டம் கிராமத்தில் பிஎம்சி எனப்படும் பீச் மினரல்ஸ் கம்பெனி என்ற மணல் நிறுவனம் இயங்கி வந்தது. இல்லை இல்லை.. இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கடல் மண் எடுத்து வருகிறது.

இந்த மணல் கடத்தல் காரணமாக மூன்று மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த மணலில் அணுக் கதிர்வீச்சுகளை வெளியிடும் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிகளில் புற்றுநோய் அபாயமும் ஏற்பட்டது. அதிகளவில் மணலை வெட்டி எடுப்பதால் கடல் நீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்டனர். இந்த பிஎம்சி நிறுவனத்தின் நடவடிக்கைகளால் புற்றுநோய் அபாயத்துடன் சேர்த்தும் குடிக்கும் தண்ணீருக்கும் கூட பிரச்சனை ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பொதுமக்கள் அதற்கு எதிராக வெகுண்டெழுந்தனர். பிஎம்சி நிறுவனம் தாது மணல் வெட்டி எடுப்பதை கண்டித்து தீவிர போராட்டங்களை கையில் எடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு கடல் மண் அள்ளுவதற்கு அதிரடியாக தடை விதித்தது. அத்துடன் ஐஏஎஸ் அதிகாரி ககந்தீப் சிங் பேடி தலைமையிலான சிறப்புக் குழு இதனை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது.

அந்த குழு கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்த அறிக்கையில், திருநெல்வேலியில் 90.29 லட்சம், தூத்துக்குடியில் 10.29 லட்சம், கன்னியாகுமரியில் 54,446 என 3 மாவட்டங்களில் 234.55 ஹெக்டேர் பரப்பளவில் 1.01 கோடி டன் மணல் அள்ளப்பட்டதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.
அதை தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் 2017 ஆம் ஆண்டு, தனியார் மணல் அள்ளும் நிறுவனங்களிடம் உள்ள மணல் கையிருப்பை மதிப்பிட உயர்நீதிமன்றம் மற்றொரு குழுவை அமைத்தது. அந்த குழு திருநெல்வேலியில் 1.37 கோடி, தூத்துக்குடியில் 12.09 லட்சம், கன்னியாகுமரியில் 5.93 லட்சம் டன் என மொத்தம் 3 மாவட்டங்களிலும் 1.55 கோடி இருப்பு உள்ளதாக 2018 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது.
மணல் எடுக்கும் நிறுவனங்கள் கையிருப்பில் இருப்பதாக அறிவித்த மணல் அளவுக்கும், கிடைத்த மணல் அளவுக்கும் இடையே 69.89 லட்சம் டன் வித்தியாசம் இருப்பதை சத்ய பிரதா சாஹூ குழு கண்டறிந்தது. அதேபோன்று தடைக்கு முந்தைய காலமான 2000 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மணல் அள்ளும் நிறுவனங்கள், தமிழ்நாடு அரசுக்கு ரூ.3,829.76 கோடி இழப்பை ஏற்படுத்தியதை அமிகஸ் கியூரி கண்டறிந்தார்.

தடைக்கு பின் 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுக்கு ரூ.2,002.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமிக்ஸ் கியூரி மதிப்பிட்டு இருக்கிறார். தாது மணல் எடுப்பதற்கும் அதற்கான போக்குவரத்துக்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்து இருந்தாலும் வெளிநாடுகளுக்கு மணல் எடுக்கும் நிறுவனங்கள் தாது மணலை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக கூறி மத்திய அரசே தனியார் மணல் அள்ளும் நிறுவனங்களுக்கு தடை விதித்தது. மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தும் மணல் மாஃபியாக்கள் அடங்கவில்லை.
தடையை மீறி அப்பகுதிகளில் தொடர்ந்து கடல் மணல் சட்டவிரோதமாக அள்ளப்படுவதும், பதுக்கப்படுவதும், கடத்தப்படுவதும் தொடர்ந்தது. இந்த நிலையில் திசையன்விளையை அடுத்த குட்டம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சர்குணராஜுக்கு சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காவல்துறை, கனிமவளத்துறை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு அவர் புகாரளித்தார். அதன் பேரில் அதிகாரிகள் பிஎம்சி நிறுவனத்தின் மணல் குடோனில் ஆய்வு செய்தனர். அங்கு 56 மணல் மூட்டைகள் தயார் நிலையிலும், 37 மூட்டைகளில் மூலப் பொருட்களும், 40 யூனிட் மணல் குவியலும் கண்டறியப்பட்டது. அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடப்பதும், அதிகாரிகள் சீல் வைப்பதும் தொடர் கதையாக இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு முல்லக்காடு குடோனில் நடைபெற்ற சோதனையில் 39 டன் மணல் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு அரசூர்-2 கிராமத்தில் பிஎம்சி நிறுவன குடோனில் நடைபெற்ற சோதனையில் 1,52,580 கியூபிக் மீட்டர் கடல் குடோனுக்கு அருகே கொட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு வல்லன்விளை பகுதியில் விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் நடத்திய சோதனையில் 3600 டன் மணல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வரிசையில் மேலும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தடைகளை மீறி இந்த நிறுவனங்களால் மணல் கடத்தலில் ஈடுபட முடிகிறது என்றால் நிச்சயமாக அதற்கு அரசின் கண்காணிப்பு குறைபாடுதான் காரணம்.
அரசின் கண்களிலேயே மண்ணை தூவிவிட்டு மணல் கடத்தலில் ஈடுபடும் இவர்களின் கொட்டத்தை அடக்க அரசு இப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். புற்றுநோய் அபாயம், குடிநீர் பிரச்சனை என இரு பெரும் சமூக, சுகாதார, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் 3 மாவட்ட மக்களின் கண்ணீரை துடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications