ஃபைன் இன்றி மின்கட்டணம் செலுத்தலாம்.. அவகாசம் நீட்டிப்பு! நெல்லை, தூத்துக்குடி மக்களே நோட் பண்ணுங்க
திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்துவதற்கான தேதி என்பது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில் 2 நாட்களும் மழை என்பது இடைவிடாது கொட்டித்தீர்த்தது.

இதனால் 4 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மேலும் சிலர் மழை வெள்ளத்தால் இறந்தனர். கால்நடைகள் செத்துப்போயின. வீடுகள் சில இடங்களில் இடிந்தது.
இதையடுத்து தமிழக அரசு, மத்திய அரசு இணைந்து செயல்பட்டு மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது இரு மாவட்டங்களிலும் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதற்கிடையே தான் வெள்ளம் பாதித்த மக்களுக்காக தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக வெள்ளம் பாதித்த கிராமங்களை சேர்ந்த ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூ.6 ஆயிரமும், குறைந்த அளவில் வெள்ளம் பாதித்த கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000ம் நிவாரணமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை புதிதாக மக்களுக்கு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில் வெள்ளத்தால் அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது 2ம் தேதியும் நெருங்கி வரும் சூழலில் மக்களுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்துவதற்கான தேதியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நீட்டிப்பு செய்துள்ளார். அதன்படி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபாராதம் இன்றி செலுத்துவதற்கான காலஅவகாசம் 2024 பிப்ரவரி 1ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2024 பிப்ரவரி 1ம் தேதி வரை நெல்லை, தூத்துக்குடி மக்கள் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம்.












Click it and Unblock the Notifications