நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்காங்க.. கணவர் மீது கனிஷ்கா போலீசில் பரபரப்பு புகார்
நெல்லை: நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்பதாகவும், இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கேட்டு கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கவிதாசிங்கின் மகள் கனிஷ்கா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதாசிங்கின் மகள் கனிஷ்கா கோவையை சேர்ந்த தன் கணவர் பல்ராம் சிங் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்பதாகவும், இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நெல்லை இருட்டுக்கடை அல்வா
நெல்லை என்றாலே அல்வாவுக்கு பிரபலமான ஊர் ஆகும். அதிலும் நெல்லை இருட்டுக்கடை அல்வாவிற்கு தனி ஸ்பெஷல் உண்டு. வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும் நெல்லை இருட்டுக்கடையில் அல்வா வாங்குவதற்கு என்றே வெளியூர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வருவதை பார்க்க முடியும். நெல்லையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த இருட்டுக்கடையின் உரிமையாளர்கள் வட இந்தியவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவரின் மகன் பிஜிலி சிங் என்பவர் இந்த கடையை ஆரம்பித்துள்ளார். 1940 ல் தொடங்கப்பட்ட இந்த கடையில் அல்வா தயாரிக்க தாமிரபரணி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அல்வாவின் தனி சுவைக்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த அல்வா கடை. இப்பொழுது அவர்களுடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் அந்தக் கடை நடத்தப்படுகிறது.
திருமணம் ஆகி 40 நாட்கள்
இன்றளவும் பழமை மாறாமல் இருட்டுக்கடை அல்வா கடை நடத்தப்படுகிறது. இந்தநிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருநெல்வேலியே வியக்கும் அளவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழா பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆட்டம் பாடம் கொண்டாட்டம் திருமண விழா களை கட்டியது. சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் வைரலாகின.
பல பிரபலங்களும் வாழ்த்திவிட்டு சென்ற்னர். திருமணம் முடிந்து 40 நாட்களே ஆகியுள்ள நிலையில் வரதட்சணை புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கவிதா சிங் அளித்த புகாரில் கூறியதாவது:-
என்னுடைய மகள் ஸ்ரீகனிஷ்காவிற்கும், கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. நெல்லை தாழையூத்து பகுதியில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு தனது கணவருடன் கனிஷ்கா கோவையில் வசித்து வந்தார். பல்ராம்சிங்கிற்கு வேறு பெண்னுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனை கனிஷ்கா கண்டித்து இருக்கிறார்.
பெற்றோர் வீட்டுக்கு வந்தார்
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் விஷயத்தை உனது தாய் தந்தையிடம் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால், வேதனை அடைந்த கனிஷ்கா, கடந்த மார்ச் மாதம் வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் வரதட்சணை வேண்டும் எனவும், நெல்லையில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடையை பல்ராம் சிங் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்று மிரட்டினர்" எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
பல்ராம் சிங் பெயருக்கு எழுதித் தர
மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இயங்கி வரும் பிரபலமான இருட்டுக்கடை உரிமையாளர் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடைபெற்று இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications