"மருமகள்".. 2வது கல்யாணத்துக்கு ரெடியான மாமனார்.. இப்ப "மாமியார்" வீட்டில்.. தியேட்டரில் பார்த்தால்?
திருநெல்வேலி: 2வது கல்யாணத்துக்கு ரெடியாகி உள்ளார் மாமனார்.. ஆனால், அதற்குள் இப்போது "மாமியார்" வீட்டுக்கு போய்விட்டார்.. என்ன நடந்தது நெல்லையில்?
நெல்லை மாவட்டம் இட்டேரி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்.. இவரது மனைவி பெயர் முத்துமாரி.. 28 வயதாகிறது.. தமிழரசன் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால், மனைவி முத்துமாரி, மாமனார் வீட்டிலேயே தங்கி உள்ளார்.. மாமனார் பெயர் தங்கராஜ்.. இவருக்கு 50 வயாகிறது.. சில வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய வீட்டை, தமிழரசனின் பெயருக்கு எழுதி தந்தார் தங்கராஜ்..
மருமகள்: எனினும், மகன் வெளிமாநிலத்தில் ராணுவத்தில் உள்ளதால், மருமகளுக்கு துணையாக, அதே வீட்டில்தான் தங்கராஜ் வசித்து வருகிறார்.. தங்கராஜின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. அப்போதிருந்தே இன்னொரு பெண்ணுடன், தங்கராஜ் பழகி வந்துள்ளதாக தெரிகிறது.. பிறகு, அந்த பெண்ணை திருமணமும் செய்து கொள்ள விரும்பினார் தங்கராஜ்.. ஆனால், அவருக்கென்று தனியாக வீடு எதுவும் இல்லாததால், அந்த பெண்ணை திருமணம் செய்து எங்கே அழைத்து சென்று வாழ்வது என்ற கவலை எழுந்துள்ளது..
அதனால், இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு அதே வீட்டில் தனியாக வசிக்கவும் ஆசைப்பட்டுள்ளார்.. ஆனால், அந்த வீடு மகனின் பெயரில் இருப்பதால், வீட்டை தன்னுடைய பெயருக்கே மாற்றி தந்துவிடுமாறு மகனை கேட்டு வந்துள்ளார்.. ஆனால், தமிழரசன் அதற்கு சம்மதிக்கவில்லை.. தன் பெயருக்கு வீட்டை எழுதி தராததற்கு காரணமே மருமகள்தான் என்றும், மகனுக்கு எதைஎதையோ சொல்லி தந்து அவரது மனதையும் கலைத்துவிட்டதாக மாமனார் நினைத்துள்ளார்.. இதுதொடர்பாக மருமகளுக்கும் மாமனாருக்கும் அடிக்கடி தகராறு வந்து போயுள்ளது..
தமிழரசன்: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழரசனுக்கு லீவு கிடைத்துள்ளது.. அதனால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. அப்போது, தங்கராஜ் தன்னுடைய மகனிடம் மறுபடியும் இதே வீட்டு விவகாரத்தை கிளப்பினார்.. தான் 2து கல்யாணம் செய்துகொள்ளப் போவதால், வீட்டை தன் பெயருக்கே எழுதி தந்துவிடுமாறு கூறினார். அதறகு தமிழரசன், அப்படியானால், நாங்கள் எங்கே செல்வது? என்று கேட்டதற்கு, "நீங்கள் வேறு வீட்டுக்கு செல்லுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். இதனால், மகனுக்கும், அப்பாவுக்கும் தகராறு முற்றியது..
அந்த வாக்குவாதத்தில், மருமகள் முத்துமாரியும் தலையிட்டு, சரமாரியாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தங்கராஜின் கோபம் முழுக்க, மருமகள் மீது திரும்பியது.. மகன் எங்காவது வெளியில் கிளம்பி செல்லட்டும் என்று காத்திருந்தார்.. அதன்படியே, சிறிது நேரம் கழித்து மகன் வெளியே சென்றதுமே, ஒரு பெரிய இரும்பு கம்பியை கொண்டுவந்து, மருமகளின் தலையில் ஓங்கி அடித்தார்.. அதில் மண்டை உடைந்து அங்கேயே ரத்தம் கொட்டி முத்துமாரி அலறினார்.. அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறிவிட்டதால், அங்கேயே முத்துமாரி சுருண்டு விழுந்தார்.
அலறல் சத்தம்: முத்துமாரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.. ஆனால், அதற்குள் தங்கராஜ் அங்கிருந்து தப்பி சென்றார்.. இதனை தொடர்ந்து குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த முத்துமாரியை, ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.. அங்கு தீவிரமான சிகிச்சை தந்தும்கூட, முத்துமாரியை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், முத்துமாரி இறந்ததுமே கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தப்பியோடிய மாமனாரை வலைவீசி தேடினர்.

இதனிடையே, தங்கராஜூவை கைது செய்யும் வரை முத்துமாரியின் உடலை வாங்க மாட்டோம் என சொல்லி, கடந்த 2 நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதைத்தொடர்ந்து போலீசார் தங்கராஜை தேடி வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது, வாக்குமூலத்தில் அவர் சொன்னதாவது:
வாக்குமூலம்: 'என் மகன் தமிழரசன் என்னுடைய பெயருக்கு பணம் அனுப்பி இட்டேரியில் 12 சென்ட் நிலத்தை முத்துமாரி பெயருக்கு வாங்க சொன்னார்.. ஆனால் அந்த நிலத்தை என்னுடைய பெயருக்கு வாங்கினேன். பிறகு விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, எனது மகனிடம் இது குறித்து மருமகள் முத்துமாரி புகார் சொன்னார்.. இதனால் என் மகனுக்கும், எனக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துமாரியிடம், நிலம் வாங்கியது தொடர்பாக ஏன் என்னுடைய மகனை இப்படி தூண்டிவிடுகிறாய்? என்று கேட்டேன்.. அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கடப்பாறையால் முத்துமாரியை தாக்கினேன். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துவிட்டார்" என்றார்.

இந்நிலையில், மருமகளை கொலை செய்து விட்டு தங்கராஜ் தப்பி ஓடிவிட்ட நிலையில், போலீசாரிடம் அவர் எப்படி சிக்கினார் என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 7-ந்தேதி முத்துமாரியை தாக்கியதும் அவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார்.. ரத்த வெள்ளத்தில் மருமகளை பார்த்ததுமே, தங்கராஜ் அதிர்ச்சி அடைந்ததுடன், அளவுக்கு அதிகமாக பயந்தும் போயுள்ளார்.. அதனால், அங்கிருந்து தப்பி செல்ல வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.. வாசலில் நின்றுகொண்டிருந்த மருமகளின் டூவீலரை எடுத்துக் கொண்டு, தப்பி சென்றிருக்கிறார்.. அரசு மருத்துவமனையில் முத்துமாரி சிகிச்சை பலனின்றி இறந்துவிடவும், தங்கராஜ் மேலும் பயந்துள்ளார்..

தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்ததுமே, வீட்டுக்கு போகாமலேயே உள்ளூரிலேயே சுற்றி வந்துள்ளார்.. இதனால் ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, என பல்வேறு இடங்களில் போலீசார் தங்கராஜை தேடிவந்தனர்.. அப்போது, நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில், கொலை செய்யப்பட்ட முத்துமாரியின் டூவீலர் நின்று கொண்டிருந்தது.. இதனால், அந்த தியேட்டருக்குள் போலீசார் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கராஜ் சுவாரஸ்யமாக படம் பார்த்து கொண்டிருந்தார். அங்கேயே "ஆன் தி ஸ்பாட்டில்" அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்திருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications