சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாள்.. அரசு சார்பில் மரியாதை!
நெல்லை: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 251 வது நினைவு நாளை முன்னிட்டு, நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் திருவுருவச் சிலைக்கு தமிழ அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டான் செவல் கிராமத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன், தனது வீரத்தால் ஆங்கிலேயரை நிலைகுலைய செய்தார். 1755-ம் ஆண்டு நெல்லை சீமையில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற போரில், ஆக்ரோஷமாக போரிட்டு, பல வெற்றிகளை ஒண்டிவீரன் குவித்தார். இறுதியில், கடந்த 1771-ம் ஆண்டு மானூரில், ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போரில் ஒண்டிவீரன் வீர மரணம் அடைந்தார். ஆங்கிலேயருடன் நடந்த போரில் மரணமடைந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், நெல்லை பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினத்தன்று, தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 251-வது நினைவு நாளை முன்னிட்டு, நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே .கே. எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் .ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இன்று விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து, இங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம். சுதந்திரப் போராட்டத்தில் நெல்லை சீமையைச் சேர்ந்த வீரர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது . இந்த மண் வீரம் விளைந்த மண்ணாகும்.
முன்னாள் முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் என்பதற்காக இந்த பகுதியில் பூலித்தேவர், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி, பாரதியார் ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தியுள்ளார். அதேபோன்று தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினும் அதை வழியை பின்பற்றி சுதந்திர போராட்டக்காரர்களுக்கு மரியாதை செய்து வருகிறார் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ராஜா, மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications