முத்தான திட்டம் திருநெல்வேலிக்கு.. மறுபுறம் "முதல்வர் சந்திக்கவில்லை".. மாஞ்சோலை மக்கள் திடீர் தர்ணா
நெல்லை: திருநெல்வேலி வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று உரையாடவிருந்த நிலையில், அந்த சந்திப்பு இன்று நடைபெறவில்லை. தொழிலாளர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால், இந்த சந்திப்பு நடைபெறவில்லை.
முதல்வர் ஸ்டாலின், மாவட்டவாரியாக அரசு திட்டப்பணிகளை களஆய்வு செய்து, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்தவகையில், திருநெல்லை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.. நேற்றைய தினம் ஏராளமான அரசு திட்டப்பணிகளை களஆய்வு செய்தார் முதல்வர்.. கங்கை கொண்டானில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா சோலார் தொழிற்சாலையை துவக்கி வைத்ததுடன், 5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தினார்..
மாஞ்சோலை: வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதல்வர், நேற்றிரவு அங்கு தங்கினா. இந்நிலையில், இன்று 2வது நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.. அதன்படி, காலை 8 மணிக்கு வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் உரையாடவிருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இதன்காரணமாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் முதலமைச்சரை காண அவர் தங்கி இருக்கும் நெல்லை அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகை முன்பு குவிந்துவிட்டனர்.. ஆனால் முதலமைச்சர் மக்களிடம் பேசாமல், வேனில் அமர்ந்தபடியே மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் முதலமைச்சரை சந்திக்க வரவழைக்கப்பட்ட நிலையில், சந்திக்க நீண்ட நேரம் அனுமதி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த மக்கள் முதல்வர் தங்கியிருந்த அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகை முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்..நேரம் ஒதுக்கியும் தங்களை சந்திக்கத் தவிர்ப்பது ஏன்? என கோஷமிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
அரசாணை: முன்னதாக, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை முதல்வர் சந்திப்பதை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்திருந்தார். தமிழக முதல்வர் மிக மிக காலம் கடந்து ஏதோ ஒரு காரணத்துக்காக மாஞ்சோலை வருவதாக தெரிகிறது.. மாஞ்சேலை மக்களை சந்திக்க நினைப்பது பழைய கணக்கை தீர்க்கவா? புதிய கணக்கை தொடங்கவா? 9 மாத கால மாஞ்சேலை மக்களின் நீதி கேட்டு, நாங்கள் ஐநாவுக்கும் செல்வோம், நெதர்லாந்தில் உள்ள ஹேக் சர்வதேச நீதிமன்றத்துக்கூட செல்வோம்" என்றெல்லாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று 2வது நாளாக திருநெல்வேலியில் முடிவுற்ற ரூ.1,679 கோடி திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,061 கோடியில் தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடங்கி வைத்தார்.
திட்டங்கள்: வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் கட்டப்பட்ட ரூ.77.02 கோடி மெகா உணவு பூங்காவை திறந்து வைத்தார். ரூ.180 கோடி மதிப்பிலான புறவழிச்சாலை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததுடன், முடிவுற்ற 23 திட்டப் பணிகளையும் துவக்கி வைத்தார். அத்துடன் பாளையங்கோட்டையில் Y வடிவ ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications