தென்காசியில் எமனாக வந்த கார்.. அரசு பஸ் கண்டக்டருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி சிக்கியது எப்படி?
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்ட முடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த வேல்துரை என்பவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் மீது வேகமாக சென்ற கார் மோதியது. இந்த விபத்து வழக்கை விசாரித்த போது, அரசு பஸ் கண்டக்டருக்கு ஸ்கெட்ச் போட்டது அவரது மனைவியும் கள்ளக்காதலனும் தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் 3 பேரும் எப்படி சிக்கினார்கள் என்பது பற்றி பார்ப்போம்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்ட முடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ என்பவருடைய மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள் என்ற உமா என்பவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறாரகள். வேல்துரை தனது குடும்பத்துடன் அடைக்கலப்பட்டணத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வேல்துரை தினமும் தனது இருசக்கர வாகனத்தல் பாவூர் சத்திரத்திற்கு சென்று, அங்கிருந்து பணிக்கு பேருந்தில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் தனது இருசக்கர வாகனத்தில் பாவூர்சத்திரம் நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, வேகமாக வந்த ஒரு கார், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வேல்துரை தலையில் பலத்த காயம் அடைந்து அங்கேயே இறந்தார். தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, காரை ஓட்டிவந்தது பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த 36 வயதாகும் ஆறுமுகம் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரது பதில்கள் எல்லாமே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் போனவரை போல் இல்லை. முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் திடீர் திருப்பமாக இது விபத்து இல்லை. திட்டமிட்ட கொலை என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
போலீசார் விசாரித்த தகவலின் படி, பேருந்து நடத்துனர் வேல்துரை தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர் 41 வயதாகும் முத்து சேர்மன் என்ற சுதாகர் என்பவருக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். இதனால் அவருக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாம். அரசு பேருந்து நடத்துனர் வேல்துரை பணிக்கு சென்ற பின்னர் 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை ஒரு கட்டத்தில் அறிந்த வேல்துரை இருவரையும் கடுமையாக கண்டித்திருக்கிறார்.. இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர், பேச்சியம்மாள் ஆகியோர் வேல்துரை உயிரோடு இருந்தால் நம்மால் ஒன்றாக இருக்க முடியாது என்று நினைத்து, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக சொல்லப்படுகிறது. விபத்து போல் செட்டப் செய்ய நினைத்துள்ளார்கள்.
இதற்காக சுதாகர் தனது நண்பரான கார் டிரைவர் ஆறுமுகத்தின் உதவியை நாடியதாகவும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஆறுமுகம் வாங்கியதாகவும் தெரிகிறது. அதன்பின்னர் நேற்று முன்தினம் அதிகாலையில் பணிக்கு பைக்கில் சென்ற வேல்துரையை காரை ஏற்றி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி சுதாகர், பேச்சியம்மாள், ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications