அதிமுக, திமுக வேண்டாம்! தவெக வொர்ஸ்ட்! பாஜக பெஸ்ட்! தாமரை கட்சியில் இணைகிறாரா காளியம்மாள்?
நெல்லை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சந்தித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான அரசியல் தலைவர்களை போல் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
நயினாரை சந்தித்துவிட்டு வெளியே வந்த காளியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நயினார் நாகேந்திரனை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக மீனவர்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் நான் ஒரு புதிய அரசியல் கட்சியில் சேர போகிறேன்.

2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வித்தியாசமான களமாக இருக்கும் என காளியம்மாள் தெரிவித்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். அக்கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவர். காளியம்மாள் சிறந்த பேச்சாளர் ஆவார்.
நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே பனிபோர் நடந்த நிலையில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சீமானுக்கு பிறகு நாதகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டவர் காளியம்மாள்.
கட்சியில் இருந்து விலகியதற்குப் பிறகு, இவர் வேறு எந்தக் கட்சியிலும் இன்னும் இணையவில்லை, ஆனால் அரசியல் கட்சிகள் பலவற்றில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெகவில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் இணைந்த போது காளியம்மாளும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தவெக பனையூர் இல்லத்திற்கு செல்கிறார் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை காளியம்மாள் மறுத்தார். அவர் கூறுகையில் "விஜய் அழைப்பு விடுத்தால் அவர்கள் நோக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் அது தொடர்பாக முடிவு எடுப்பேன்" என கூறியிருந்தார். திமுக தரப்பும் அதிமுக தரப்பும் காளியம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது.
ஆனால் நாதகவில் இருந்த போது அந்த இரு கட்சிகளையும் காளியம்மாள் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் அந்த கட்சிகளின் அழைப்பை அவர் ஏற்கவில்லை என சொல்லப்பட்டது. இந்த நிலையில் காளியம்மாள், நயினார் நாகேந்திரனை சந்தித்துள்ளதால் பாஜகவில் அவர் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
தவெகவில் தற்போது சூழல் சரியில்லை. மேலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஒரு பிரச்சினை வந்ததும் எப்படி ஆகிவிட்டார்கள் என்பதை காளியம்மாள் கவனித்திருக்கிறார். அதனால் அவர் அந்த கட்சியில் இணைவார் என்பது சந்தேகம்தான். எனவே அவர் பாஜகவுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications