உடையாத கழுத்து.. உடைந்த மர்மம்? நெல்லை ஜெயக்குமார் வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. போலீஸ் என்ன சொல்றாங்க?
நெல்லை: கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் கூறியுள்ளனர்.
நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் வழக்கில் போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வந்த போதிலும், இதுவரை தடயங்கள் எதுவும் சிக்காதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 2ஆம் தேதி தனது தந்தையை காணவில்லை என நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நான்காம் தேதி அவரது சொந்த ஊரில் அவரது தோட்டத்தில் வீட்டிற்கு பின்புறம் பாதி உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
நெல்லை ஜெயக்குமார்: தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் உலாவின. குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டி ஜெயக்குமார் கடிதம் எழுதியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையா? தற்கொலையா?: ஜெயக்குமாரின் கை கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டதோடு வயிற்றில் கடப்பாக்கல் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. இதனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஜெயக்குமாரின் மரணம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் ரீதியான கொலையா அல்லது தொழில் ரீதியாக ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது கடன் பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
தீவிர விசாரணை: ஆரம்பத்தில் ஜெயக்குமாரின் உடல் மீட்கப்பட்ட விதத்தை வைத்து பார்க்கும்போது அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எவ்வித முடிவுக்கும் வர முடியாத நிலையில் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, அரசியல் பிரமுகர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
சிசிடிவி பதிவுகள்: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்த கேவி தங்கபாலு, நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், ஜெயக்குமாரின் உறவினர் மருத்துவர் செல்வகுமார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் ஜெயக்குமாரின் வீட்டை சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை இரண்டாம் தேதியிலிருந்து நான்காம் தேதி வரை போலீசார் தீவிரமாக ஆராய்ந்தனர்.
முன்னேற்றம் இல்லை: அதிலும் எந்த தடயமும் சிக்கவில்லை. இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு 16 நாட்கள் கடந்தும் இதுவரை விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பல சிக்கலான வழக்குகளை கையாண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்தவர்கள் என்பதால் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
திடீர் திருப்பம்: ஏற்கனவே 10 தனிப் படைகள் விசாரணை மேற்கொண்டு வந்திருக்கும் நிலையில், தற்போது இந்த வழக்கில் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் கொலைக்கான முன் விரோதம் இல்லை எனவும், உயிரிழப்பின் போது அவரது கழுத்து நெரிக்கப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஏற்கனவே வெளியான கடிதங்களை எழுதியது ஜெயக்குமார் தான் என்பதை தடயவியல் அறிக்கை உறுதி செய்துள்ள நிலையில், தற்கொலை என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications