ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென ஏற்பட்ட தலை சுற்றல்.. உடல் நலக்குறைவால் பாதிப்பு
நெல்லை: நெல்லை தென்காசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாநிலம் முழுவதும் உள்ள தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.
அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது ஓபிஎஸ் பேசுகையில், "அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. நாங்கள் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை ஏற்படுத்தி தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்து கழகத்தை நடத்தி வந்தோம்.
இதேபோல் அதிமுக கட்சியின் விதிப்படி அமைப்பு ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏற்படுத்தி அதன் பட்டியலையும் அனுப்பி வைத்து கட்சியை நடத்தி வந்தோம். ஆனால் மெல்ல மெல்ல எடப்பாடி பழனிசாமி தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார். ஒற்றைத் தலைமை வேண்டுமென்று அவரது ஆதரவாளர்களை பேச வைத்தார். இதனை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.எனினும் எப்படி பணத்தை கொண்டு முதல்வர் ஆனாரோ அதேபோன்று பொதுச் செயலாளர் பதவியையும் கட்சியின் விதியை மீறி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நான் ஒன்றை உறுதியாக தெரிவிக்கிறேன். அவர் பதவிக்கு வந்த பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களிலும் அதிமுக ஏன் தோல்வி அடைந்தது?, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வரவேண்டும் என்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உங்களால் முதல்வர் ஆக முடிந்ததா?, தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் முதல்வர் ஆனீர்களா?. இன்று இந்த கட்சியை அதள பாதாளத்தில் கொண்டு போய் விழச் செய்திருக்கிறீர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பாஜக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. அவர்கள் கூட்டணியை அமைத்து தனது பக்கத்தில் வலது புறத்தில் அமர செய்தார்கள்.. ஆனால் ஒரே வாரத்தில் கூட்டணியில் இருந்து விலகி விட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.. பாஜக உடன் கூட்டணியில் இருந்து எப்போது விலகினீர்களோ, அப்போது முதல் உங்களுக்கு சனி பிடித்து விட்டது. அந்த சனி உங்களை சும்மா விடாது. அந்த சனி எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் நகராது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா, டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாம் தேர்தலை சந்திப்போம்" இவ்வாறு ஓ பன்னீர் செல்வம் நேற்று இரவு கூட்டத்தில் பேசினார்.
கூட்டம் முடிந்த பின்னர் நெல்லை சந்திப்பு பகுதியில் தனியார் ஓட்டலில் இரவில் ஓ பன்னீர்செல்வம் தங்கினார். தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி யூனியன் கங்கணாங்குளத்தில் ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் சந்தித்து பேசும் நிகழ்ச்சி செல்வதாக இருந்தது. இதற்காக ஓபிஎஸ் இன்று காலை புறப்பட்டு கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாம்.
இதனால் ஓ பன்னீர்செல்வம் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்தார். இதனால் கங்கணாங்குளத்தில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தான் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கிடையே தலை சுற்றல் காரணமாக ஓய்வெடுத்த ஓ.பன்னீர்செல்வத்தை மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதனிடையே தொண்டர்களை சந்திக்காமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்படுவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.












Click it and Unblock the Notifications