பேஸ்புக் பழக்கம்.. ஆசை வார்த்தையால் போன தொழில் அதிபர்.. திருநெல்வேலி பெண் கொடுத்த ஒரிஜினல் அல்வா
திருநெல்வேலி: பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய திருநெல்வேலி பெண், ஆசை வார்த்தை கூறி கூப்பிட்டதால் வீட்டிற்கு போன சேலம் தொழில் அதிபருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்த 47 வயதாகும் நித்தியானந்தம் தொழில் அதிபர் ஆவார். இவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த 40 வயது பெண்ணான பானுமதி என்பவருடன் பேஸ்புக் மூலமாக பழகி வந்தார். முதல் முதலாக நித்தியானந்தத்தை பானுமதி கடந்த 3 மாதம் முன்பு தொடர்பு கொண்டார். அவர்கள் கடந்த 3 மாதங்களாக பேஸ்புக் மூலமாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்த பழக்கத்தை வைத்து பானுமதி அடிக்கடி நித்தியானந்தத்துடன் பேசி வந்திருக்கிறார்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 29-ந்தேதி பானுமதி ஆசைவார்த்தை கூறி நித்தியானந்தத்தை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதனை நம்பி தொழில் அதிபர் நித்தியானந்தமும் அங்கு சென்றார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த பானுமதியின் கூட்டாளிகள் 4 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து நித்தியானந்தத்திடம், 'எதற்காக இங்கு வந்தாய்?' என்று கூறி மிரட்டி, அவரை வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.
அப்போது தொழில் அதிபர் நித்தியானந்தம் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள், கழுத்தில அணிந்து இருந்த 2½ பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை மிரட்டி பறித்தனர். அத்துடன் நித்தியானந்தத்தின் செல்போன் வங்கி செயலி மூலமாக ரூ.75 ஆயிரத்தை உடனடியாக பறித்துள்ளனர். பின்னர் அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி சென்று, பின் நம்பரை மிரட்டி வாங்கிக்கொண்டு அதன் மூலமாக ரூ.60 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.
பின்னர் நித்தியானந்தத்தை காரில் கடத்தி சென்று, நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தங்களுக்கு பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். நித்தியானந்தத்திடம் அவரது வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று, ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்திருக்கிறார்.
அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நித்தியானந்தம் தன்னிடம் வேலை செய்யும் நபரிடம் செல்போனில் எப்படியோ போராடி தெரிவித்தார். உடனே அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார் தெரிவித்தார். உடனே நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
தொழில் அதிபர் நித்தியானந்தத்தை கடத்தி நகை-பணம் பறித்த பானுமதியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட நித்தியானந்தத்தையும் மீட்டனர். அவரை கடத்தி நகை-பணம் பறித்ததாக பானுமதியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (46), வெள்ளத்துரை (42), ரஞ்சித் (42), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுடலை (40) ஆகியோரையும் கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications