சீவலப்பேரி மாயாண்டி கொலை! சபாநாயகர் அப்பாவு சமரச பேச்சால் போராட்டம் வாபஸ்! குவியும் பாராட்டு
நெல்லை: நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் இரு சமூகத்தினரிடையே மோதல் சம்பவம் நடைபெறாத வகையில் சபாநாயகர் அப்பாவு தடுத்து நிறுத்தியதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கோயில் நிர்வாகத்தை உரிமை கொண்டாடும் பிரச்சினையில் கடந்த ஏப்ரல் மாதம் சிதம்பரம் எனும் கோயில் பூசாரி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் அதே சமூகத்தை சேர்ந்த மாயாண்டி என்பவரும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு சீவலப்பேரியில் படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூசாரி கொலை
பூசாரி கொலை வழக்கில் வலதி என்ற சண்முகம், வல்லநாட்டைச் சேர்ந்த தம்பான், பிரபா என்கிற பிரபாகரன், பல்லிக்கோட்டை மாடசாமி, சுபாஷ், வசவப்புரம் மதன் என்ற மாயாண்டி, இசக்கிபாண்டி, சீவலப்பேரியை சேர்ந்த முத்துராஜ், கொக்கிகுமார் என்கிற வெயிலுகுமார், மாசானமுத்து, 3 சிறுவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்
இந்த நிலையில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்ததை கண்டித்து சமூக மக்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். கொல்லப்பட்ட மாயாண்டி மற்றும் சிதம்பரம் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி மற்றும் அரசு வேலைவாய்ப்பு கேட்டு 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதுவரை மாயாண்டியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
இது தொடரக்பாக நேற்று முன் தினம் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இறந்த மாயாண்டியின் மனைவி நம்பி நாச்சியார் உள்பட உறவினர்கள் 10 பேர் பங்கேற்றனர். அப்போது மாநகராட்சி அல்லது அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி வழங்கப்படும். அங்கன்வாடி பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது முன்னுரிமை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

5ஆவது நாள் போராட்டம்
ஆனால் இதை ஏற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று 5 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. அழகுமுத்துகோன் சிலை முன்பாக நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர். இதனால் நெல்லை மாநகர போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. எனினும் தடையை மீறி அந்த இடத்திற்கு வந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடை அடைப்பு
இந்த சம்பவத்தை அறிந்த நூற்றுக்கணக்கானோர் அழகுமுத்து கோன் சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் சமாதானப்படுத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள கடைகள் அழைத்தும் திடீரென அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பாவு பேச்சுவார்த்தை
இந்த நிலையில்தான் மாயாண்டியின் உறவினர்களிடம் நேற்றைய தினம் வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட பூசாமி , மாயாண்டி குடும்பத்தினருக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்கப்படும் என அப்பாவு உறுதியளித்தார்.

போராட்டம் முடிவுக்கு வந்தது
இதையடுத்து நேற்று மாயாண்டியின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். இதனால் 5 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணத்தை அப்பாவு வழங்கினார். மேலும் பாளையங்கோட்டையில் போராட்டம் நடத்தி கைதான 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். சபாநாயகர் அப்பாவு தலையிட்டு மேலும் போராட்டம் நடைபெறவிடாமல் பார்த்துக் கொண்ட சம்பவத்தை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications