நெல்லை, பொதிகை மற்றும் முத்துநகர் ரயில்களின் புறப்படும் நேரம் புத்தாண்டு முதல் மாற்றம்
திருநெல்வேலி: பொதுவாக ரயில்கள் நேர அட்டவணை ஒவ்வொரு புத்தாண்டின்போது மாற்றியமைக்கப்படுவது வழக்கம். கடந்த 2025ம் ஆண்டு பிறந்த போது ஏராளமான ரயில்களின் நேரம் மாற்றப்பட்டது. அந்த வகையில் 2026 புத்தாண்டு முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் நெல்லை, பொதிகை மற்றும் முத்துநகர் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்படுகிறது.
தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள், சென்னையில் வசிக்கிறார்கள். சென்னைக்கு வாரம் வாரம் போய் வரும் மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக விரும்புவது ரயில் பயணத்தை தான். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மக்கள் மிகவும் விரும்புவது ரயில் போக்குவரத்தை தான்.

தென் மாவட்ட மக்கள் அதிகம் பேர் வசிப்பதாலேயே ஒரு நாளைக்க 10 ரயில்கள் வரை இயக்கப்படுகிறது.. இதில் நெல்லை, பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரயில்கள் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632) : திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், தற்போது இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல், இந்த ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இரவு 8.50 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதிகை எக்ஸ்பிரஸ்
செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12662) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், செங்கோட்டையில் இருந்து தினமும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு எழும்பூரை வந்தடையும். புதிய மாற்றத்தின்படி, ஜனவரி 1 முதல் மாலை 6.50 மணிக்கு இந்த ரயில் புறப்படும். பின்னர் மறுநாள் சென்னை எழும்பூரை வழக்கத்தை விட முன்னதாகவே, அதாவது காலை 5.55 மணிக்கே சென்றடையும் வகையில் பயண நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
முத்துநகர் எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12694) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், தூத்துக்குடியில் இருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த நிலையில், வருகிற 1-ந்தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு ரயில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ்
கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16102) : செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. வருகிற 1-ந் தேதி முதல் தாம்பரம் ரயில் நிலையத்தை காலை 6.05 மணிக்கு சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications