ப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நாங்குநேரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஒரு காரணம்; ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாததால் இப்போது ப. சிதம்பரம் சிறையில் இருக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் முன்னீர்பள்ளம் என்ற இடத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்த போது பேசியதாவது:
தமக்கு வாக்களித்த மக்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ. நினைக்காமல் பதவிக்கு ஆசைப்பட்டு மக்களுக்கு துரோகம் செய்தார். அதனால்தான் தற்போது தேர்தலை நாம் சந்திக்கிறோம்.

காங்-க்கு பாடம்
காங்கிரஸ் கட்சியால்தான் நாங்குநேரி தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

ஸ்டாலின் கூறுவது வேடிக்கை
ஜெயலலிதா மறைவுக்கு காரணமே கருணாநிதியும் அவரது மகன் மு.க.ஸ்டாலினும்தான். இவர்கள் தொடர்ந்த வழக்கால்தான் ஜெயலலிதா துன்பத்துக்குள்ளாக்கி மனமுடைந்து உயிரிழந்தார். இப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஸ்டாலினுக்கு பேச தெரியாது
தற்போது திண்ணை பிரசாரம் செய்து மனுவாங்குகிறார் ஸ்டாலின். இதேபோல் ஆட்சியில் அமர்ந்து மக்களிடம் மனுக்களை வாங்கியிருந்தால் ஸ்டாலின் நல்ல தலைவர். மேடைகளில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின்.

ஜெ. ஆன்மா விடாது
ஜெயலலிதா மரணத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஒரு காரணம். ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாததால்தான் தற்போது சிதம்பரம் சிறையில் இருக்கிறார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஸ்டாலின் முதல்வராக முடியாது
இதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரத்தின் போது பேசுகையில், திமுக நடத்திய ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சியாக இருந்தது. அதனால் முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!