கொலைக் களமான கோவில் திருவிழா..கரகாட்டத்தில் நடந்த கத்திக் குத்து! ரெண்டு உசுரு போச்சே..கதறிய உறவுகள்
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறு எதிரொலியாக சகோதரர்கள் இருவர் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர். சில நேரங்களில் கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கு, சமீபத்தில் தீபக் ராஜா கொலை என நெல்லையே பதற்றத்துடன் காணப்படுகிறது.
நீதிமன்றங்களில், பரபரப்பான சாலைகளில், பொதுமக்கள் கூடும் இடங்களில், பள்ளி, கல்லூரி வாசல்களில், காவல் நிலையங்களில் என, படுகொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை எனவும், தமிழகத்தில் எந்தப் பகுதியிலுமே பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என தமிழக எதிர்க் கட்சிகள் ஆளும் கட்சியை மிகத் தீவிரமாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தேனி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சாதிய ரீதியான கொலைகளை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த சில தினங்களாக சாதி ரீதியான கொலைகள் குறைந்திருக்கும் நிலையில், தற்போது முன் விரோத கொலைகள், மதுபோதை தகராறு கொலைகள் அதிகரித்து வருவது காவல்துறையினரை திணற வைத்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் நெல்லையில் அரங்கேறி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. திசையன்விளை அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறின் எதிரொலியாக சகோதரர்கள் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலைமாடசாமி திருக்கோவில் கொடை விழா நேற்று இரவு நடைபெற்றது. கொடை விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறி ஒரு பிரிவைச்சேர்ந்த இளைஞர் கத்தியால் மற்றொரு பிரிவை சேர்ந்த அண்ணன் தம்பியை குத்தி கொலை செய்துள்ளார். மேலும் ஒரு சகோதரருக்கு காயம் ஏற்பட்ட ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் கத்திக்குத்தில் மதிராஜா மற்றும் மதியழகன் இருவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடித்து உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த மற்றொரு சகோதரர் மகேஷ்வரன் 41 ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்திக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சம்பவம் குறித்து கொலை நடைபெற்ற இடம் மற்றும், கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை கக்கன் நகர் பகுதிகளில் விசாரணை செய்து வருகின்றனர். நெல்லை எஸ்பி சிலம்பரசன் விடுப்பில் இருப்பதால் குமரி மாவட்ட எஸ்பி தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
