"லுங்கி, டவுசர்".. கோயிலுக்குள் பர்தா அணிந்து சென்றது யார்.. போட்டோ வேற.. நெல்லை இந்து முன்னணி ஆவேசம்
கோயிலுக்குள் பர்தா அணிந்து சென்றவர் யார் என கேட்டு இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியது
நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்து சென்ற பெண்கள் போட்டோ எடுத்தது குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையின் மிக முக்கியமான அடையாளமாக திகழ்வது நெல்லையப்பர் கோயில்... இந்த கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 26-ம் தேதி கொடியேற்றத்துடன் அமர்க்களமாய் தொடங்கியது.
இதனால், தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர்.. தைப்பூச திருவிழா என்பதால், அதாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 5ம் தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பர்தா பெண்
இந்த நிலையில், கல்லூரி பெண்கள் சிலர் கூட்டமாக கோயிலுக்கு வந்திருக்கிறார்கள்.. அவர்களுடன் பர்தா அணிந்த பெண் ஒருவரும் கோயிலுக்குள் சென்றிருக்கிறார். மாற்று மதத்தை சேர்ந்தவர்கள், கொடிமரத்தை தாண்டி செல்வதற்கு தடை இருக்கும் நிலையில், அந்தப் பெண் அதைக்கடந்து உள்ளே சென்றதாக தகவல் ஒன்று பரவியது... இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் பரவின. அதனால் நெல்லையப்பர் கோயிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.. அதனால், இந்த சர்ச்சை குறித்து கோயில் நிர்வாகத்தினர் விளக்கம் ஒன்றை தந்ததாக தெரிகிறது.

லீவு நாள்
"லீவு நாள் என்பதால், காலேஜ் மாணவிகள் சிலர் டவுனுக்கு வந்திருக்கிறார்கள்... அவர்கள் கோயிலுக்கு வந்தபோது அந்த பர்தா அணிந்த பெண்ணும் வந்திருக்கலாம்... ஆனால், அவர் மண்டபம் வரை மட்டுமே வந்திருக்கிறாரே தவிர, அதைத்தாண்டி உள்ளே செல்லவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்கள்.. எனினும், இந்த விவகாரத்துக்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன், 7ம்தேதி கோயில் அலுவலகம் முன்பு, கண்ணில் கறுப்பு துணியை கட்டி போராட்டம் நடத்தப்போவதாக நெல்லை மாவட்ட இந்து முன்னணி அறிவித்திருந்தனர்.

காடேஸ்வரா சுப்பிரமணி
பின்னர் இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், "திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலுக்குள் கருப்பு நிற பர்தா அணிந்த நபர் மூலஸ்தானம் முன்பு வரை சென்று பல்வேறு இடங்களை படம் பிடித்துள்ளார் என தெரிய வருகிறது. கோவில் பணியாளர்கள் யாரும் என்ன? ஏது? என்று கூட கேட்கவில்லை. தகவல் அறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் வந்ததும் வெளியில் வந்த பர்தா அணிந்த நபர் நிற்காமல் ஓட்டம் பிடித்துள்ளார்.

லுங்கி, டவுசர்
அந்த நபர் எதற்காக வந்தார்? என்ன கொண்டு வந்தார்? என்ன செய்தார்? என்பது மர்மமாக உள்ளது. கோவில் நிர்வாகம் தவறை பூசிமெழுகுவது போல் பதில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த நெல்லையப்பர் கோவிலிலேயே இந்த நிலை என்றால் மற்ற கோவில்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது திருக்கோவிலுக்கு ஒரு சூழ்நிலையில் ஆபத்தை ஏற்படுத்தகூடும். லுங்கி, டவுசர் அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு வைத்துள்ள கோவில்களில் பர்தா மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது?

பிளாக் போர்டு
பல வருடங்களுக்கு முன்பு வரை எல்லா கோவில்களிலும் கொடிமரம் முன்பு ஆகமவிதிப்படி இந்துக்கள் அல்லாதோர் செல்லக்கூடாது என்ற அறிவிப்பு பலகை இருக்கும். அது பல கோவில்களில் அகற்றப்பட்டுள்ளதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாகிறது. மீண்டும் அது போல அறிவிப்பு போர்டுகள் வைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தெய்வங்களை வழிபட வருவோர் இந்து தெய்வ நம்பிக்கைக்யோடு இந்து கலாச்சாரப்படி வழிபாடு செய்வதே முறையாக இருக்கும். நெல்லையப்பர் கோவில் சம்பவத்தை படிப்பினையாக கொண்டு தமிழக கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

கருப்பு துணி
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடியே இந்து முன்னணியினர் நெல்லையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. அத்துமீறி நுழைந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தவும் கோரி இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் கண்களில் கருப்பு துணி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. நெல்லையப்பர் கோயில் அருகே நடந்த இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இந்து முன்னணியை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications