ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி? திமுக இளைஞரணி மாநாடுக்கு முதற்கட்டமாக ரூ.1.50 கோடி நிதி!
திருவள்ளூர்: சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடுக்கு முதற்கட்டமாக ரூ.1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார் ஆவடி நாசர் எம்.எல்.ஏ.
இதன் மூலம் தன்னிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும் கூட தலைமை மீதோ, கட்சி மீதோ தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என்பதை அவர் உணர்த்தியுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது கொடுக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் நிதி என்பது முதற்கட்டம் தான் என்பதும் இன்னொரு ரவுன்ட் இதேபோல் வெயிட்டான தொகையை நிதியாக கொடுக்க அவர் தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையிலிருந்து ஆவடி நாசர் நீக்கம் செய்யப்பட்ட போதே இது அவருக்கான தற்காலிக தண்டனை தான் என்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு தருவதற்கான சூழல் சாதகமாக இருப்பதாகவும் நாம் குறிப்பிட்டிருந்தோம். இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைப்பதற்கான சூழல் தென்படுகிறது.
இதனிடையே திருவள்ளூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருந்தார் ஆவடி நாசர். அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதியும், ஆவடி நாசரை புகழ்ந்து பேசத் தவறவில்லை.

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடுக்கு இளைஞரணி நிர்வாகிகள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் முன் வைத்துள்ளார். இன்னும் மாநாடுக்கு 100 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications