திருவள்ளூரிலே "அது" இருக்குதாமே.. பூண்டி காட்டுல சத்தம் வேற வருதாம்.. கிடுகிடுன்னு நடுங்கும் மோவூர்
திருவள்ளூர்: திருவள்ளூரில் நைட் நேரத்தில் அந்த சத்தம் கேட்கிறதாம்.. கால்நடைகளும் திடீர் திடீர் என இறந்துவிடுகின்றனவாம்.. இதுகுறித்து விசாரணை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரிக்கரை அருகே ஒரு காட்டுப்பகுதி இருக்கிறது.. இந்த பகுதியில், மோவூர் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர்.. அந்த காட்டுப்பகுதியிலேயே வேலை பார்த்து வருகிறார்கள்.. இதனால், வீடுகளில் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.. இதுதான் இவர்களது பிரதான வாழ்வாதாரமாகும்.
கால்நடைகள்: இந்த நிலையில் சமீபநாட்களாகவே, இந்த கிராமத்தில் இருக்கும் கால்நடைகள் திடீரென இறக்க ஆரம்பித்துள்ளது.. இரவு வரை நன்றாக இருக்கும் ஆடு,மாடுகள், பொழுது விடிந்ததும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ந்தனர்.. இப்படித்தான், ரஜினி என்பவரின் 8 ஆடுகள் இறந்துவிட்டன. இறந்துபோன விலங்குகளின் உடம்பில், ரத்த காயங்கள் கிடந்தன.. அப்போதுதான், மர்ம விலங்கு கடித்து, இந்த ஆடுகள் இறந்ததாக சந்தேகிக்கப்பட்டது.
ஆடுகள்: இறந்த ஆடுகளின் கழுத்து பகுதியில் மட்டுமே நிறைய காயங்கள் கிடந்ததாம்.. அதனால், ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றுவிட்டு சென்றதாக திடீரென அந்த பகுதியில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே பயந்திருக்கும் மக்கள், இந்த தகவலால் மேலும் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் பீமன் தோப்பு கால்நடை மருத்துவர் சரவணகுமார், கால்நடை ஆய்வாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களை ஆய்வு செய்தனர்.. அப்போது, சிறுத்தைப்புலி நடமாட்டத்துக்கு வனத்துறையினர் வலுவாக மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
சிறுத்தைப்புலி: இருந்தாலும், சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன், சிறுத்தைப்புலி கால் தடம் பதிவாகி உள்ளதா என்றும் நேரடியாகவே பார்வையிட்டு வருகின்றனர்.. பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டாலும், மோவூர் கிராம மக்கள், இன்னமும் சிறுத்தை புலி பீதியால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்... இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications