பொன்னேரியில் ரியல் எஸ்டேட் புரோக்கர்.. திருவள்ளூரில் விஜயகுமாரிக்கு சபலம்.. கணவன்னு கூட யோசிக்கலயே
சென்னை: பள்ளி மாணவர்களை அழைத்து வருவதாக சென்றவர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கொல்லப்பட்டார்.. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டனர்.. தற்போது இந்த பயங்கர சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர் விசாரணையில் திருவள்ளூர் போலீசார் இறங்கியிருக்கிறார்கள். என்ன நடந்தது சம்பவத்தன்று?
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, டி.டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்.. இவருக்கு 47 வயதாகிறது.. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவகுமாருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், இரண்டு பெண் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ஆட்டோவில் சென்ற சிவக்குமார்
திருவேற்காடு பகுதியிலேயே செயல்பட்டும் வரும் ஒரு தனியார் பள்ளியில், சிவகுமாரின் பிள்ளைகள் படித்து வருகிறார்கள்.. எப்போதுமே தன்னுடைய பிள்ளைகளை, ஆட்டோவில் சென்று அழைத்து வருவதை சிவக்குமார் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பும்கூட, பிள்ளைகளை அழைத்து வர ஆட்டோவில் சென்றார்.. அப்போது கோலடி பகுதியில் உள்ள மின்சார சுடுகாடு அருகே ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு, இயற்கை உபாதை கழிக்க கீழே இறங்கியுள்ளார்.
அப்போது, அவரை சுற்றிவளைத்த அடையாளம் தெரியாத நபர்கள், மறைத்து வந்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள்.. இதில், ரத்த வெள்ளத்திலேயே சிவக்குமார் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்..
ரியல் எஸ்டேட் புரோக்கர்
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த திருவேற்காடு போலீசார், சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அருகில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேட துவங்கினர்..
சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், அதில் ஒருவருடன் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததால், அதுதொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல்கட்டமாக விசாரணையில் தெரியவந்தது..
அதுமட்டுமல்லாமல், தொழில் போட்டி காரணமாகவே, தன்னுடைய கணவரை கொன்றுவிட்டார்கள் என்று சிவக்குமார் மனைவி விஜயகுமாரியும் கண்ணீருடன் கூறி வந்தார்..
விஜயகுமாரியின் கள்ளக்காதல்
இந்நிலையில், தற்போது மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. அதாவது, திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவகுமாரின் மனைவி விஜயகுமாரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் சிவகுமாருக்கும் தெரியவந்துள்ளது.. இதனால் விஜயகுமாரியை கண்டித்தும், அறிவுறுத்தியும் வந்தாராம்.. இது மனைவிக்கு எரிச்சலை தந்துவரவும், கணவரை கொல்ல முடிவெடுத்துள்ளார்.. இதற்காக கூலிப்படையையும் ஏற்பாடு செய்து, கணவரின் கொலையை அரங்கேற்றியிருப்பதும், விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது..
இப்போது சிவகுமார் வழக்கில் மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிக்கிய கார் டிரைவர்
சுரேஷ் என்பவர் அந்த பகுதியில் கார் டிரைவராக இருந்து வந்துள்ளார். அவரின் தூண்டுதலின்பேரில் ரவுடி லால் பிரகாஷ் இந்த கொலையை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூலிப்படை தலைவன் லால் பிரகாஷ், கல்லூரி மாணவன் மோகன் (20) என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு இந்த கொலையை செய்துள்ளதும் அம்பலமாகியிருக்கிறது.. ரவுடி லால் பிரகாஷ் மீது கொலை, கொலைமுயற்சி, கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது.
தொழில்போட்டியால் இந்த கொலை நடந்தது என்று விஜயகுமாரி தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், கூலிப்படை வைத்து கணவரை கொன்ற சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications