தவெக தலைவர் விஜய் பரந்தூர் சென்றது நல்ல விஷயம்.. மக்களுடன் கலந்துரையாடாதது ஏன்? ஜெயக்குமார் பதில்!
திருவள்ளூர்: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்திருப்பது நல்ல விஷயம் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்கள் விருப்பப்படவில்லை என்றால் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று கூறிய ஜெயக்குமார், விஜய் மக்களுடன் கலந்துரையாடாமல் சென்றது ஏன் என்பது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சந்தித்தார். அப்போது விஜய் பேசுகையில், உங்களுக்காக எப்போதும் நான் இருப்பேன். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பபெற வேண்டும். ஆளுங்கட்சியின் நாடகத்தை மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் அழிவு மக்களை பாதிக்கும். வளர்ச்சிக்கு எதிரானவன் நான் இல்லை. ஆனால் பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றே கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மக்களை பாதிக்காத வகையில் பரந்தூர் விமான நிலையம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், அதிமுகவை பொறுத்தவரை மக்கள் எண்ணத்திற்கு மாறாக எந்த திட்டமும் கூடாது என்பதே நிலைப்பாடு. மக்கள் எதிர்க்கும் போது, அந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது. மக்கள் கருத்தை ஏற்று, தமிழக அரசு செயல்பட வேண்டும். எதேச்சதிகாரம் கூடாது.
அதேபோல் தவெக தலைவர் விஜய் பரந்தூர் சென்று மக்களை பார்த்துள்ளார். அது நல்ல விஷயம் தான். அதற்கு ஆளும் திமுக அரசு தான் பதில் சொல்ல வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் சென்றது ஏன் என்பதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்திடம் தான் கேட்க வேண்டும். அதனை என்னிடம் கேட்பது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அதிமுகவின் கூட்டணி தொடர்பாக ஏற்கனவே அறிவித்துவிட்டோம். பாஜகவுடன் இன்றும் கூட்டணி இல்லை, நாளையும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளோம். நாளையும் கூட்டணி இல்லையென்றால், 2026 சட்டமன்றத் தேர்தல் தான். இதனை மீண்டும் மீண்டும் அதிமுக தரப்பில் கூறி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications