Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூரில் இரட்டை கொலை! பொங்கல் நாளில் கல்லால் அடித்து கஞ்சா கும்பல் வெறிச் செயல்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூரில் பொங்கல் பண்டிகை முடிந்து திரும்பிய நண்பர்கள் இருவர், கஞ்சா போதைக் கும்பலால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட இருவரும் மணவாளநகர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

மணவாளநகர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), செவ்வாப்பேட்டை பல்லவன் வங்கியில் பணியாற்றினார். இவரது நண்பர்கள் கேசவமூர்த்தி (25), சுகுமார் (31). இவர்கள் மூவரும் பொங்கல் கொண்டாட ஆந்திர மாநிலம் கோனே நீர்வீழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

crime tiruvallur

16ஆம் தேதி இரவு 7 மணியளவில் அவர்கள் மணவாளநகர் வந்து சேர்ந்தனர். அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ராகவேந்திரா பேக்கரி அருகே பேசிக் கொண்டிருந்தபோது, பைக்கில் வேகமாக வந்த கஞ்சா போதையிலிருந்த இருவர் மோதும் அளவுக்கு நெருங்கி வந்துள்ளனர்.

'ஏன் இப்படி வேகமாக வருகிறீர்கள்' எனக் கேட்ட பார்த்திபன் உள்ளிட்டோருடன் அந்தக் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கைகலப்பானது. இதையடுத்து அந்த ஆசாமிகள் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில், இரவு உணவு முடித்துவிட்டு, பார்த்திபன் தனது நண்பர்களுடன் இரவு 10:30 மணியளவில் வெளியே வந்தார். அப்பொழுது, அவர்களுடன் முன்னர் சண்டையிட்ட இருவரும், மேலும் இருவருமாகச் சேர்ந்து பார்த்திபன் உள்ளிட்ட மூவரையும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கினர்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுகுமார் மற்றும் கேசவமூர்த்தி இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராட, போதைக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அக்கம் பக்கத்தினர், உயிருக்குப் போராடிய சுகுமார் மற்றும் கேசவமூர்த்தியை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் உயிரிழந்தார். கேசவமூர்த்தி, தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுகொலை செய்யப்பட்ட பார்த்திபனுக்கு மனைவி மற்றும் ஒரு 2 வயது குழந்தை உள்ளனர்.

சுகுமாரின் மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த இரட்டைக் கொலையாக மாறிய கொடூரச் சம்பவம் திருவள்ளூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், மக்களிடையே அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

மணவாளநகர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பார்த்திபனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், இந்த இரட்டைக் கொலை வழக்கின் குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், ஜவகர் (23), வினோத்குமார் (36), ஜோதிஷ் (34), நீலகண்டன் (30) ஆகியோர் இக்கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தக் கொடூர நிகழ்வு குறித்து தகவல் அறிந்த ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், நீதி கோரி பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், கொலைக் குற்றவாளிகள் மணவாளநகர் பகுதியில் பதுங்கியிருப்பதை தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. அவர்களைச் சுற்றி வளைத்தபோது, தப்பியோட முயன்ற நீலகண்டனுக்கு மதில் சுவர் ஏறி குதித்ததில் வலது காலிலும், ஜவகருக்கு வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்தோர் உட்பட நால்வரையும் போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, 'மாவுக்கட்டு' போடப்பட்ட பிறகு தீவிர விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போதையின் விளைவாக ஏற்படும் குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த இரட்டைக் கொலையானது அப்பகுதியில் மேலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி கண்டனம்

கஞ்சா போதையில் நடந்த இந்த இரட்டைக் கொலைக்கு தி.மு.க. அரசே முழுப் பொறுப்பு என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பத்தில் கஞ்சா போதையில் நான்கு பேர், கற்களால் அடித்து இருவரைக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூரத்திற்கு கஞ்சா போதையே காரணம்.

திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தின் கஞ்சா நுழைவாயிலாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருள்களும் தடையில்லாமல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன. இரு இளைஞர்களின் படுகொலைக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்," என்றும் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன் அறிக்கை

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை - இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று கற்களை வீசி இருவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அதோடு, திருத்தணி அருகே இருளர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு கஞ்சா போதையில் இருந்த கும்பல், அங்கிருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நினைத்துப் பார்க்கும் போதே மனதை உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிவிட்டதோடு, போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என விளம்பர வீடியோ வெளியிட்டதன் மூலம் தனது கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் தமிழகத்தில் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ முற்றிலும் செயலிழந்திருப்பதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

எனவே, திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+