ஏ.ஆர்.ரகுமானுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் திடீர் சந்திப்பு! அதுவும் ஒரு மணி நேரம்
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்டூடியோவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்ற போதிலும் இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அய்யர்கண்டிகையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரம்மாண்ட ஸ்டூடியோ உள்ளது. இங்கு நேற்று மாலை 6.30 மணிக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார்.

அவர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது. இந்த சந்திப்புக்கான காரணம் ஏதும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானை, எல்.முருகன் எதற்காக சந்தித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நமது கலாசாரம் தொடர்பாக "சத்யம், சிவம் சுந்தரம் எனும் வெவ்ஸ்" என்ற மத்திய அரசின் குறும்படத்திற்கு இசையமைத்து கொடுத்ததால் இசையமைப்பாளர் ரகுமானை, எல். முருகன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடிகை மீனா, டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தார். அது போல் பாஜகவில் கலா மாஸ்டர், குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். மீனாவும் விரைவில் இணைவார் என சொல்லப்படுகிறது. மீனாவுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றெல்லாம் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன.
கடந்த பொங்கல் பண்டிகையின் போது மத்திய அமைச்சர் வீட்டு பொங்கல் விழாவில் மீனா பங்கேற்றார். இந்த தகவல்களுக்கு மீனா மறுப்பு தெரிவித்திருந்தாலும் அவர் அண்மையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார்.
எனவே அவருக்கு மத்திய அமைச்சர் பதவி என்பது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில இருப்பதாக சொல்லப்படுகிறது. எத்தனையோ சீனியர்கள் இருக்கும் போது கட்சியின் உறுப்பினரே இல்லாத மீனாவுக்கு இத்தனை பெரிய பதவியா என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விஜயதாரணியும் நயினார் நாகேந்திரன் தெற்கு மாவட்டத்துக்காரர்கள். தற்போது நயினார் , தமிழக பாஜக தலைவராகிவிட்ட நிலையில் கூட தனக்கு எந்த பதவியும் கொடுக்காதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிகிறது.
மாநில அளவில் 28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க பாஜக உத்தேசித்துள்ளது. அதில் குஷ்பு உள்ளிட்டோருக்கு பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் எல். முருகன், ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக சொல்கிறார்கள்.
மேலும் தமிழகத்தின் இணைப்பு மொழி ஆங்கிலம் என சொன்ன மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன போது தமிழகத்தின் இணைப்பு மொழி தமிழ் என உரக்க சொன்னவர் ரகுமான். அது போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்ட போது தமிழணங்கே என்ற பாடலையும் இயற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications