திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 400 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால ஓவியம் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருமஞ்சன கோபுரத்தில் 400 வருடம் பழமையான நாயக்கர் கால ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் சுதர்சன் , உதயராஜா ஆகியோர் இணைந்து நடத்திய சமீபத்திய மீள் ஆய்வின் பொழுது அண்ணாமலையார் கோவிலின் தெற்கு ராஜ கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஒரு ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் , புரவி மண்டபம் , கல்யாண மண்டபம் மற்றும் மேற்கு திருமால் பத்தியில் உள்ள ஓவியங்களே ஆவணம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்ஓவியம் இதுவரை ஆவணம் செய்யப்படவில்லை.

உத்குடிகாசனம்
இவ் ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர , அவரின் வலது பக்கம் வள்ளியும் இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர். தலையை அழகான கிரீட மகுடம் அலங்கரிக்க , காதில் குண்டலங்களும் கழுத்தில் கண்டிகை , சரப்பளி அணிந்து , மார்பின் மீது முறையே ஸ்தன சூத்திரம் , முப்புரிநூல் மற்றும் உரஸ் சூத்திரம் அணிந்து மார்பின் கீழ் உதரபந்தத்துடன் காட்சி தருகிறார்.

கீழ்கரம்
வலது மேற்கரம் வஜ்ராயுதம் ஏந்தியும் , கீழ் கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் , இடது மேற்கரம் சக்தி குலிசம் ஏந்தியும் கீழ் இடக்கரம் வரத முத்திரையிலும் காட்சி தருகிறது. அனைத்து கைகளிலும் தோள் வளை மற்றும் கைவளைகள் அணிந்து இருபக்க தோள்களிலும் தோள் மாலை அழகுறக் காட்சி தருகிறது.

16 கோலங்கள்
முருகன் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு , தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து "சிகிவாகனராக" நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்த புராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று "சிகிவாகனர்" என்பது குறிப்பிடதகுந்தது.

முருகன்
மயிலின் தலையானது முருகனைப் பார்த்துத் திரும்பிய நிலையில் , அதன் வாயில் பாம்பின் வால் பகுதியைக் கவ்வி உள்ள நிலையில் பாம்பின் உடல் மயிலின் உடல் மீது ஊர்ந்து முருகனின் இடக்காலின் கீழ் காட்சி பாம்பின் தலை படமெடுத்த நிலையில் காட்சி தருகிறது. முருகனின் வலப்புறம் உள்ள வள்ளியும் இடப்புறம் உள்ள தெய்வானையும் மிகவும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை.

சாமரம் வீசும் காட்சி
இடப்புறம் தெய்வானையின் அருகே சேடிப்பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது. அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது. அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பெற்றுள்ள சாமரம் வீசம் சேடி பெண் மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகிறது. அதற்குமேல் வலப்புறமும் ஓவியம் மிகவும் சேதாரமாகி உள்ளது.

கருப்பு மை
இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு , கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு , மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர். இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோயிலின் நாயக்கர் கால ஓவியத்துடனும் , ஆந்திர மாநிலம் லீபாக்ஷி வீரபத்திரர் கோவில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர் கால ஓவியமாகக் கருதலாம். அதுமட்டும் அல்லாமல் , இவ் ஓவியத்தின் அருகே இதே போல இரண்டு தொகுப்புகள் முற்றிலும் அழிந்து , ஆங்காங்கே வண்ணங்கள் மட்டுமே திட்டுகளாக தென்படுகிறது. மேலும் இக்கோவிலில் புரவி மண்டபத்தின் விதானத்தில் உள்ள கிரிஜா கல்யாணம் , பாற்கடல் அமிர்தம் கடையும் காட்சி அடங்கிய ஓவிய தொகுப்பை இவ்ஓவியம் ஒத்துள்ளது குறிப்பிடதகுந்தது.

தஞ்சை நாயக்கர் மன்னர்
திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். எனவே இவ்ஓவியத்தை 16ம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஓட்டியதாக இதனைக் கருதலாம். சுமார் 400 வருடம் பழமையான இந்த ஓவியத்தைச் சிதைவிலிருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும் இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து , இதனை புணரமைத்து இந்த ஓவியத்தைப் பாதுகாத்திட முன் வர வேண்டும்.












Click it and Unblock the Notifications